கேரள நபர் தற்கொலை: பேருந்தில் வீடியோ எடுத்து பகிர்ந்த பெண் கைது!

கேரள நபர் தற்கொலை: பேருந்தில் வீடியோ எடுத்து பகிர்ந்த பெண் கைது!


 

கோழிக்கோடு: கேரள பேருந்தில் தன்னை ஒருவர் தவறாக தொட்டதாக ஒரு பெண் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் கடந்த ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தற்கொலை செய்துகொண்ட நபரை வீடியோ எடுத்து, அவர் மீது குற்றம்சாட்டிய பெண் ஷிம்ஜிதா முஸ்தபா இன்று (ஜன.21) கைது செய்யப்பட்டார்.


கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் யூ (42), ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் கண்ணூருக்குப் பயணம் செய்தார். அப்போது தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.


அந்த வீடியோவில், தீபக் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஷிம்ஜிதா குற்றம்சாட்டினார். அவரின் தொடுதல் தற்செயலாக நடக்கவில்லை என்றும், இது பாலியல் வரம்பு மீறல் என்றும் ஷிம்ஜிதா குறிப்பிட்டிருந்தார்.


அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தீபக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஞாயிறு அன்று தீபக் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் மரணம் குறித்தும், அவர் பற்றி பரப்பப்பட்ட வீடியோ குறித்தும் கேரள காவல் துறை தீவிர விசாரணை நடத்தியது.


காவல் துறையின் விசாரணையை அடுத்து, தீபக் மீது பாலியல் ரீதியாக குற்றம்சாட்டி ஆன்லைனில் வீடியோ வெளியிட்ட பெண் ஷிம்ஜிதா முஸ்தபா (35) மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


தீபக்கின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்தச் சூழலில், வடகராவில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதா இன்று கோழிக்கோடு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை விசாரணைக்கு கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு மண்டல காவல் துறை துணைத் தலைவர் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%