
நாமக்கல், ஜூலை 22-
தமிழக அரசு லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநிலம் முழுவதும் லாரிகளை நிறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வோம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதன் பின்னர் சம்மேளன தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், லாரிகள், ட்ரெய்லர்கள், டேங்கர்கள் உள்ளிட்ட 6.50 லட்சம் கனரக வாகனங்களும், 20 லட்சம் இலகு ரக வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல், உதிரி பாகங்கள், டயர், இன்சூரன்ஸ் பிரிமியம் ஆகியவற்றின் அதிகப்படியான விலை உயர்வாலும், வாகனங்களுக்கு போதிய லோடு கிடைக்காததாலும், லாரி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இத்தொழிலை, நேரடியாகவும், மறைமுகமாகவும், 2 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், லாரி தொழிலில் மேலும் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதால், அவற்றுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பெரிய அளவில் நடைபெறும் லாரித் தொழில் குறித்து, தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும் வகையில், வரும் 29ம் தேதி, சென்னை கும்மிடிபூண்டி சோதனை சாவடி அருகில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதில், தமிழகத்தில் மாநில எல்லைகளில் உள்ள, 22 சோதனை சாவடிகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து துறை மூலம் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் லைசென்ஸ் ஆகியவற்றை தபாலில் அனுப்பாமல், நேரில் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் கனரக வாகனங்களில் சரக்குகளை ஏற்றி, இறக்க குத்தகைதாரர்கள் என்ற போர்வையில் சுங்கம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால், வரும், ஆகஸ்ட் மாதம் மாநில சம்மேளன செயற்குழுவில், தமிழகம் முழுவதும் காலவரயைற்ற வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்க நிர்வாகிகள் ராமசாமி, தாமோதரன், சின்னசாமி, குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?