சட்டவிரோத பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சட்டவிரோத பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: '

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும். இந்த விஷயத்தில், கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கையை உயரதிகாரிகள் எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.



நாகப்பட்டினத்தை சேர்ந்த அருளரசன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களில், கட்சிகள் சார்பில் சட்டத்திற்கு புறம்பாக பேனர்கள், அலங்கார வளைவுகள், பிளக்ஸ் போர்டுகள் அமைக்கப்படுகின்றன.



கடமை உள்ளது கட்சிகள் தங்களை விளம்பரப்படுத்த பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றாலும், அலங்கார வளைவுகள், பிளக்ஸ் போர்டுகள், கொடிகள் நிறுவ அனுமதி பெற வேண்டும்.பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ளது.



சாலைகள், வீதிகள், நடைபாதைகளில் அவற்றை அமைப்பதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகிறது. டிஜிட்டல் பேனர்களை தனியார் நிலம் அல்லது கட்டடத்தில் நிறுவ, அந்த இடத்தின் உரிமையாளருடைய தடையில்லா சான்று தேவை.



நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான நிலத்தில், டிஜிட்டல் பேனர்கள் அல்லது பிளக்ஸ் போர்டுகள் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரி, தொடர்புடைய போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்.



இது, பேனர்கள், பிளக்ஸ்களால், போக்குவரத்திற்கு தடை இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள், நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.



பிளக்ஸ்களை அமைப்பதில் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. அனுமதியும் பெறுவதில்லை. அரசியல்வாதிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பேனர்களை அமைத்து வருகின்றனர். இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.



அரசியல்வாதிகளின் சட்டவிரோத செயல்களை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இதனால், அனுமதியின்றி சட்ட விரோதமாக அலங்கார வளைவுகள், பேனர்களை அமைப்பது தொடர்கிறது.



சாலைகள், நடைபாதைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்ட விரோத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.



மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் செந்தில் முருகன் ஆஜரானார். விதிகள்படி அகற்றப்படும்அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், ''சட்டவிரோத பேனர்கள், உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு மற்றும் விதிகளின்படி அகற்றப்படும்,'' என்றார்.



பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள், பிளக்ஸ்கள், அலங்கார வளைவுகள் அமைப்பதை தடுக்க மற்றும் அகற்ற காவல், வருவாய், உள்ளாட்சி துறைகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அவ்வழியாக அதிகாரிகள் கடந்து செல்கின்றனர். ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை.அரசு அதிகாரிகள், மக்களின் வரிப் பணத்திலிருந்து நல்ல சம்பளம் பெறுகின்றனர் . கடமையை நிறைவேற்ற தவறுகின்றனர். இதனால், மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.



நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தாக்கலாகின்றன. சம்பளத்தில் பிடித்தம் இவ்விவகாரத்தில் கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கையை உயரதிகாரிகள் எடுக்க வேண்டும்.



அகற்றுவதில் கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து, அதை அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடலாம் என கருதினோம். இருந்தபோதும் அதை தவிர்க்கிறோம்.



மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்கள், பிளக்ஸ்கள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும்.இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் ஆக.20ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%