பாலாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்தாத தமிழக அரசு: மன்னிக்க முடியாது என்கிறார் அன்புமணி
சென்னை:
பாலாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்தாத தமிழக அரசை மன்னிக்க முடியாது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றத் தீர்ப்பை செயல்படுத்தத் தவறியதற்காக தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இயற்கை நமக்கு கொடுத்தக் கொடையைக் காக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பல மாதங்களாக செயல்படுத்தாமல் தமிழக அரசு கிடப்பில் போட்டிருப்பதை மன்னிக்கவே முடியாது.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் பொருள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், நேரடியாக பாலாற்றில் கலக்கவிடப்படுவதால் ஆறு கடுமையாக மாசுபடுகிறது. இதைத் தடுப்பதற்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் தொடரப்பட்டவழக்கு சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதை அறிந்த நீதிபதிகள், அதற்காக தமிழக அரசுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.
பாலாற்றை காக்கும் நோக்குடன் தொடரப்பட்ட வழக்கில் 2001-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட், பாலாறு கழிவுகளால் பாதிக்கப்பட்ட 29 ஆயிரம் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; பாலாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. அதை எதிர்த்து 2011-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி 30-ஆம் நாள் தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; வேலூர் மாவட்டத்தில் தூய்மையான, ஆரோக்கியமான சூழலை அடையாளம் கண்டு, உருவாக்கிப் பராமரிப்பது குறித்து தணிக்கை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தது.
ஆனால், சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் நீதியரசர் சத்தியநாராயணா தலைமையில் குழு அமைக்கப் பட்டதைத் தவிர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
இதன் மூலம் தமிழக ஆட்சியாளர்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்? என்பதை எளிதாக அடையாளம் காண முடியும். இந்த நிலைமை மாறாதவரை பாலாற்றை பாதுகாக்க முடியாது.
பாலாறு வழக்கில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள், இந்தத் தீர்ப்பை செயல்படுத்தத் தவறியவர்களையும், இந்தத் தீர்ப்பை மீறுபவர்களையும் தமிழகத்தில் உள்ள சிறைகளில் கூட அடைக்க மாட்டோம். டில்லியில் உள்ள திஹார் சிறையில் தான் கொண்டு வந்து அடைப்போம் என்று எச்சரித்திருந்தனர். தமிழக அரசுக்கு எதிராக அத்தகைய நடவடிக்கையை சுப்ரீம்கோர்ட் எடுக்கும் நிலையை அரசு ஏற்படுத்திவிடக் கூடாது. பாலாற்றை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.