சினிமாவை விஞ்சிய கொள்ளை: பிரான்ஸ் மியூசியத்தில் 4 நிமிடத்தில் கைவரிசை - நடந்தது என்ன?

சினிமாவை விஞ்சிய கொள்ளை: பிரான்ஸ் மியூசியத்தில் 4 நிமிடத்தில் கைவரிசை - நடந்தது என்ன?


பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பிரபலம்தான். அப்படியொரு படத்தை விறுவிறுப்பாக எடுப்பதற்கான கதைக் களத்தை பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகத்தில் இந்திய நேரப்படி கடந்த 19-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடந்த கொள்ளைச் சம்பவம் கொண்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.


4 நிமிடங்களில் நடந்த கொள்ளை: பிரான்ஸின் பாரிஸ் நகரில் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ளது லூவர் அருங்காட்சியம் (Louvre Museum). இங்கு கடந்த ஞாயிறு அன்று நுழைந்த கொள்ளையர்கள் வெறும் 4 நிமிடங்களில் அங்கிருந்த விலைமதிப்பற்ற மாமன்னன் நெப்போலியனின் 8 நகைகளைக் கொள்ளையடித்தனர். வழக்கமாக இந்த அருங்காட்சியகத்தை பார்வையாளர்களுக்காக காலை 9 மணிக்கு திறப்பார்கள். அதன்படி ஞாயிறு அன்றும் திறக்கப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்து முடிந்திருந்தது.


அருங்காட்சியகத்தின் 2-வது தளத்தில் உள்ள அப்பல்லோ கேலரியில் தான் நெப்போலியனின் அந்த விலைமதிப்பற்ற நகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இரண்டாவது தளத்தை அடைய ட்ரக்கில் பொருத்தப்பட்டிருந்த ஏணியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். டிஸ்க் கட்டர் எனப்படும் மரம் அறுவை இயந்திரத்தைப் பயன்படுத்தி ஜன்னல் சட்டத்தை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்து 8 நகைகளைக் கொள்ளையடித்தனர். கூடவே 3-வது நெப்போலியன் மன்னரின் மனைவி பேரரசி யூஜினின் கிரீடத்தையும் திருடியுள்ளனர். ஆனால், அந்தக் கிரீடம் அருங்காட்சியகத்துக்கு அருகிலிருந்த இடத்திலேயே மீட்கப்பட்டது.


4 பேர் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. நன்கு திட்டமிட்டு துணிச்சலாக காலை வேளையில் இந்தக் கொள்ளையில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சர் கூறினார். இன்னும் அந்தக் கொள்ளைக் கும்பல் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


லூவர் அருங்காட்சியகம் 200 ஆண்டுகளாக பிரான்ஸ் மன்னர்களின் அரண்மனையாக இருந்தது. 1793-ல் பிரெஞ்சு புரட்சியின்போதுதான் அந்த மாளிகை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. ஆனால், அப்போதிருந்தே அங்கே அவ்வப்போது கொள்ளைச் சம்பவங்கள் நடந்த வரலாறு உள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%