சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்


“இவை அனைத்தும் கற்பனை அல்ல. நாம் அடிமைப்பட்டு கிடக்கும் விடயத்தை

விளக்கமாக விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்”

சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். கல்லூரி மாணவனான

நண்பரின் மகன் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்வதுபோல ரெடியாகி என் முன் வந்து

நின்றார். முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசித்தது. என்ன விசேசம் என்று

கேட்டதற்கு அவர் சொன்ன பதில்தான் என்னை வியப்புக்குள்ளாக்கியது. அவரின்

கல்லூரிக்கு இன்ஸ்டாகிராம் புகழ் என்று யாரோ ஒருவர் வருகிறாராம். அவரை

இன்ஸ்டாவில் தான் பாலோ செய்வதோடு, அந்த புகழுடைய பெரிய விசிறி என்றும்

அவரை காண கல்லூரி விழாவிற்கு ரெடியாகி செல்வதாகவும் கூறினார் அந்த

மாணவர்.

அவர் சொன்ன அந்த புகழை கொஞ்சம் தேடி பார்த்தேன். சரியென்றால் அவர் கல்லூரி

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கு தகுதியில்லாதவர். அவருடைய

சாதனையென்றால் ஒன்றுமில்லை. பின் எப்படி அந்த கல்லூரி நிர்வாகம் இவரை

அழைத்தது. இன்னும் பல கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்ல அவர்

அழைக்கப்பட்டிருக்கிறாராம். இது எப்படி?

மற்றொரு நிகழ்ச்சி, மறைந்த பிரபல எழுத்தாளர் பிறந்த ஊரிலுள்ள ஆலயத்திற்கு

நடிகர் ஒருவர் சென்றிருந்தார். மக்கள் கூட்டம் கடல் அலைப்போல அந்த நடிகரின்

பின்னே சென்றது. அந்த நடிகருக்கு மட்டுமல்ல இந்த கடலலை. மற்ற நடிகர்கள்,

நடிகைகள் எல்லோருக்கும்தான். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அந்த நடிகர்

கடவுளிடம் என்ன வேண்டிருப்பர். தான் பின்னே வரும் இந்த கூட்டம் சீரும்

சிறப்புமாக வாழ வேண்டுமென்றா? எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் உங்களுக்கு

நம்பிக்கையிருந்தால் உங்கள் மகனுக்கோ மகளுக்கோ கல்வி விடயமாகவோ அல்லது

உங்கள் தேவை வேண்டி உதவியோ கேட்டால் அவர் செய்வாரா? சரி நீங்கள் கேட்கும்

கேள்வியும் என் காதில் ஒலிக்கிறது. அவர் எதற்கு எங்களுக்கு உதவி செய்ய

வேண்டுமென்று தானே கேட்கிறீர்கள். பிறகு நீங்கள் மட்டும் ஏன் அவர்களின்

படங்களுக்கு உழைத்த உங்கள் பணத்தை செலவு செய்து கொண்டாடி

ஆராதிக்கிறீர்கள்.

சரி எங்கள் நடிகர் விளம்பரம் செய்யாமல் அதை செய்தார்! இதை செய்தார்! என்று

சொல்வோமானால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அந்த நடிகருக்கும், நாட்டை

எதிரிகளிடமிருந்து காக்க எல்லையில் பனியில் விழித்திருக்கும் நம் நாட்டு வீரர்கள்

இருவரில் யார் சிறந்தவர்கள்? ஏன் இராணுவ வீரர்களை கொண்டாட நாம்

தவறிவிட்டோம்.


நம் நாட்டில் பிறந்து கல்வியில் சிறந்து விளங்கிய மதிப்பிற்குரிய ஐயா அப்துல்

கலாமை எடுத்துக் கொள்வோம். சாதாரண ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்த அவர்

தனது கடின உழைப்பால் இந்த நாட்டிற்கே ஜனாதிபதியானார். அந்த உயர்ந்த

நிலையை அடைய அவர் பயன்படுத்தியது கல்வியும், அதை சார்ந்த அறிவுசார்ந்த

விடயமும் மட்டும்தான். அவரும் மேற்சொன்ன பிரபலங்களை அன்று

கொண்டாடிருந்தால் என்ன நடந்திருக்கும். ஒன்றும் நடந்திருக்காது. அவரோடு அவர்

கதையும் முடிந்திருக்கும்.

ஒரு திரைப்பிரபலத்தின் வீட்டு முன் நீங்கள் சென்றால் வாசலை கூட பார்க்க

முடியாமல் திருப்பி அனுப்பப்படுவீர்கள். இதே திரைப்பிரபலம் உங்கள் வீட்டிற்கு

வந்தால் கடன் வாங்கியாவது கோழிக்குழம்பை ரெடியாகி விடுவீர்கள். இதே தங்களை

வளர்க்க கஷ்டப்படும் பெற்றோர்களிடம் முகம் சுழிக்கும் சில பிள்ளைகள் ‘தாங்கள்

இந்த நடிகருக்கு பெரிய விசிறி’ என்று சொல்பவர்களின் பாதுகாவலர்கள் தங்களை

எட்டி தள்ளிவிட்டாலும் அந்த நடிகரை ஆராதிப்பது அடுத்த கொடுமை.

கேரவனில் மேக்கப் கலையாமல் ஏசியில் அமர்ந்திருக்கும் அவர்களுக்கும், வெயிலில்

உடல் வளைத்து தன் குடும்பம் மேலோங்கி வர உழைக்கும் பெற்றோருக்கும் ஏன்

நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை. ஏசி கேரவனில் சுற்றி திரிந்து கஷ்டப்பட்டேன்

என்று சொல்லும் அவர்களுக்கும், பிள்ளைகள் நலனே தமது வாழ்க்கை என்று

வெயிலில் காய்ந்து உழைக்கும் நம் பெற்றோருக்கும் எவ்வளவு வித்தியாசம்?

சென்னையில் வசிக்கும் என் நலம்விரும்பியும் எழுத்தாளருமான ரங்கராஜன் என்பவர்

என்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல். 1972 ஆம் ஆண்டு அவர் கல்லூரியில் படித்து

கொண்டிருந்த சமயம், கல்லூரி நிகழ்ச்சிக்கு ஜெயகாந்தனை சிறப்பு விருந்தினராக

அழைக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து அவரிடம் பேச ‘நீங்கள் சிறப்பு

விருந்தினராக மாணவர்கள் முன்னால் உரையாற்ற வேண்டும். எங்களால் இவ்வளவு

தொகை கொடுக்க முடியும். உங்களுக்கு இந்த தொகை சரிபட்டு வருமா’ என்றதற்கு

ஜெயகாந்தனோ ‘ச்சீ காசெல்லாம் எனக்கு வேணா. மாணவர்கள் முன்னால் பேசுவது

என் கடமை, நான் வருகிறேன்’ என்று சொல்லி நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.

அத்தோடு மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்த ரங்கராஜன்

அவர்களை அழைத்து “தம்பி வெளியில என் கார்ல டிரைவர் இருப்பாரு அவர

கொஞ்சம் போய் பாரு, சரியான இடத்துல கார் பார்க் பண்ணிருக்காறானு,

டிரைவருக்கு எதாவது தேவைனா செஞ்சிக்கொடு” என்றாராம். பார்க்கிங் உள்ள

இடத்தில் போய் பார்த்த ரங்கராஜனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே டிரைவர்,

காரின் பின்பக்க கதவை திறந்து ஜெயகாந்தனின் புத்தகங்களை அடுக்கி வைத்து

கல்லூரி நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம் விற்று கொண்டிருந்தாராம். நிகழ்ச்சி முடிந்து

வந்த ஜெயகாந்தனிடம் விற்பனை செய்த புத்தகத்திற்கான பணத்தை டிரைவர் எண்ணி

கொடுக்க ஜெயகாந்தன் அதிலிருந்து சில நோட்டுகளை டிரைவருக்கு கொடுக்க,

ரங்கராஜனுக்கு அப்போதுதான் எல்லாம் புரிந்தது. இவர் நினைத்திருந்தால் கல்லூரி


நிகழ்ச்சி அழைப்புக்கே நல்ல தொகையை வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் அதை

வாங்காமல் கிடைத்த ஒரு நேரத்தை உழைப்பாக்கியிருக்கிறார். போகும்போது

ரங்கராஜனை அழைத்து அவரின் சினிமாவுக்கு போன சித்தாள் குறுநாவலை

கொடுத்து, தன்னை காண எப்போது வேண்டுமானாலும் நீ வரலாம் என்றாராம். இந்த

சம்பவம் எழுத்தாளரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக விவரிக்கவில்லை. இதே

ஒரு நடிகர் நடிகையை அல்லது இன்ஸ்டாகிராம் புகழை அழைத்திருந்தால் அவர்கள்

கேட்ட தொகையை கல்லூரி கொடுத்திருக்கும். அவர்களும் ஏசி காரில் வந்து சுய

முன்னேற்றம் என்ற தலைப்பில் சக்கையான ஒன்றுமில்லாத விடயங்களை பேசிக்

கொண்டிருப்பார்கள். மாணவர்களும் செல்போனில் அவரை விதவிதமாக படம்

பிடிப்பார்கள். இதில் பயனோ அந்த நடிகருக்கு மட்டுமே.

கல்வி சார்ந்த விடயத்தில் தேர்ந்தவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியில்

உயர்ந்தவர்கள், தொழிலதிபர்கள், அறிவியில் துறையில் சாதித்தவர்கள், சமூக

ஆர்வலர்கள், முன்னேற்றம் சார்ந்த விடயங்களில் தேர்ந்த கதை சொல்லிகள்

ஆகியோரை ஏன் சில கல்லூரி நிர்வாகங்கள் அழைப்பதில்லை. அவர்களை

மறுக்கிறதா? மறக்கிறதா?

எப்போது திரையில் காணும் பிரபலங்கள் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும்

திரைத்துறையினர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பொழுதை வீணடிப்பவர்களை சக

மனிதர்களாக பார்க்கிறோமோ அப்போது தான் நாம் உருப்படுவது நிச்சயம்.

‘உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு, உன்னால் ஓட முடியவில்லை என்றால்

நட, உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழு, எதுவாக இருந்தாலும் சோர்ந்து

மட்டும் போய் விடாதே முன்னேறி கொண்டே இரு’ என்றார் மார்ட்டின் லூதர் கிங்.

ஆனால் நாமோ பிரபலங்கள் மீது கொண்ட வீண் மோகத்தால் அடிமையாக வாழ்ந்து

கொண்டிருக்கிறோம். இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட சற்று அல்ல அதிக நேரம்

நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இங்கு அனைவரும் பெரியார், அறிஞர் அண்ணா, அப்துல் கலாம், காரல் மார்க்ஸ்,

ஆபிரகாம் லிங்கன் போன்ற உயர்ந்த மனிதர்களை அறியாமல் இல்லை. ஆனால்

அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்கள், உழைப்புகள், சாதனைகள்

போன்றவைகளை நாம் அறியாமல் விட்டது தான் தவறு. அவர்கள் நினைவு நாட்களில்

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதால் மட்டுமே நாம் அவர்களை

அறிந்தோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை.

தேடுதல் வேட்கை நம்மிடம் குறைந்து வருவதால் தான் தேங்கி நிற்கும் குப்பையாக

இந்த வீண் பிரபலங்கள் மீது நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம். எதை தெரிந்து

வைத்துக் கொள்ள வேண்டுமோ அதை நாம் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. எதை

தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாதோ அதை அதிக அளவிலே தெரிந்து வைத்து

நேரத்தை வீணடிக்கிறோம். வாழ்வில் நாம் மட்டுமல்ல நாம் நேசிக்கும் நமது நாடும்


உயர முன்னேற்ற பாதையை நோக்கி நல்ல விடயங்களை தேடுவோம். பிறகு

பிரபலங்கள் மீதுள்ள இந்த அடிமைத்தனம் தானாக ஒழியும்.


- சாந்தி ஜொ

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%