சூரசம்ஹார நன்னாளில் சூரனை வென்ற சுப்பிரமணியனின் அறுபடை வீடுகளை வணங்கி வழிபடுவோம்.
பழனி
———-
வாழ்க்கையை வாழ
பக்குவம் வேண்டும்
காயான எதுவும்
கனிந்தாலே இன்பம்
வாழ்வின் தத்துவம்
மானுடர்க்கு உரைக்க
தானே நின்றான்
கனிவேண்டி குன்றில்
கனிவேண்டி குன்றமர்ந்த
கனிவான கனியே
கனிந்திட்ட மனம்வேண்டி
கனியுன்னை வேண்டினேன்
கனியான கனியேநீ
காயான என்னை
கனிந்திட செய்வாய்
கனிவுடன் அருள்வாய்!
பழனிப்பதி வாழ் பாலகுமாரா
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா!
சுவாமிமலை
———————
ஏரகத்தில் ஏறிநின்ற
எம்மான் முருகா
என்றுமுன் புகழ்பாட
ஏற்றமே வாழ்வில்
நானென்ற அகங்காரம்
நான்முகன் கொண்டான்
பாலகன் என்றெண்ணி
பாராமல் சென்றான்
குணக்குறை அதனை
குணக்குன்று பொறுக்குமோ
அகமழிக்க எண்ணினான்
அறிவுக்குறை கண்டான்
சுட்டினான் அதனை
குட்டினான் தலையில்
சட்டென்று தண்டனை
ஓட்டினான் சிறைக்கு
பரிந்துவந்த பரமன்
பாவம் நான்முகனென
சிறைமீட்சி வேண்டி
பாலனைக் கேட்டார்
கேள்விக்கு பதிலிறுத்து
கேட்டதைப் பெறலாமென
தனயன் உரைத்தான்
தந்தையை தடுத்தான்
இறையே ஆனாலும்
ஈசனும் பெற்றவனே
தன்பிள்ளை வாய்மொழி
குழலினும் இனிதன்றோ
அறியாற்போல் இருந்தான்
கைகட்டி வாய்மூடி
சித்திரப் பாவையின்
அத்தகம் அடங்கியாற்போல்
மாசில்லா மறையின்
முதற்பொருள் உரைக்க
ஆசானாய் அமர்ந்தான்
அத்தனுக்கு குருவாக
வித்தக வேல்முருகா
வேண்டுதல் கேட்டிடுவாய்
சித்தத்தின் மயக்கம்
சற்றே போக்கிடுவாய்
குருவாய் வருவாய்
அருள்வாய் குஹனே!
திருச்செந்தூர்
————————
ஆணவத்தின் உருவமாகி
சூரனவன் நின்றான்
அன்னைதந்த வேல்வாங்கி
அழகனவனை அழித்தான்
மாமரமாய் உருக்கொண்ட
மதிகேடன் அவனை
மால்மருகன் கைவேலால்
இருகூறாய் செய்தான்
மயிலும் சேவலுமாகி
மன்னவன் அடிசேர்ந்தான்
யாரறிவார் அவனது
பெரும்பேறு யாதென்று
போர்தனிலே புண்ணியனும்
பேருருவம் காட்டினான்
ஆயிரம்கோடி மன்மதனும்
கந்தவேள் காலின்
கட்டைவிரல் ஒன்றுக்கு
ஈடாவரோ அறியேனென்று
அகத்தில் எண்ணினான்
பணியென்றது மனம்
ஆகாதென்றது ஆணவம்
சமர்செய்து வென்றிடு
சண்டமாருதமென வந்தது
கந்தனின் கைவேல்
ஆணவம் அழிந்தது
செந்தில்வளர் கந்தன்
சேவடி தொழுதிட
சிந்தையில் என்றுமே
கந்தனின் உருவமே!
திருப்பரங்குன்றம்
—————————-
வரம் பெற்றசூரன்
வரபல ஆணவத்தால்
வரம்பிலா அக்கிரமம்
வரிசையாய் செய்தான்
வரப்போகும் அழிவை
வருமுன் காத்திலான்
தேவரும் மூவரும்
திகைத்து நின்றபோது
தீயிலே உதித்தான்
தீதழிக்க வந்தவன்
தீமையது கொன்றான்
நன்றதனை வென்றான்
வாக்களித்த அமரரரும்
வாக்குத் தவறிலர்
செம்பொன் அழகியாம்
சீர்மிகு தெய்வானையை
சீராகத் தந்தனர்
சிந்தை குளிரந்து
கந்தனும் ஏற்றான்
ஏற்றமுடன் நின்றான்
திருப்பங்கிரி ஏறி
எங்கள் குறையெலாம்
என்றும் தீர்த்திடவே!
திருப்பரங்கிரி வேலனுக்கு
அரோகரா அரோகரா!
திருத்தணி
——————
தெய்வகுஞ்சரி கரங்கொண்டு
பரங்கிரி நின்றவன்
கலகமுனி சொல்கேட்டு
கானகம் ஏகினான்
வேடுவனாய் வேடமிட்டு
வேல் விடுத்தான்
மயில் துறந்தான்
மங்கையின் மனங்கொள்ள
தினைப்புனம் சென்றான்
குலமுதல்வன் சொல்கேட்டு
குறமகள் வந்துற்றாள்
தினைப்புனம் காக்க
திருமகள் மருகனும்
தீராக் காதலால்
திருப்பிட முற்ற்சித்தான்
திருமுகம் தனைக்காண
இயல்பான பெண்மையின்
இறுக்கம் தளராது
மறுத்தது வேடனை
மாறுமுகம் கொண்டது
உறவுகள் எல்லாம்
உவகையுடன் வந்து
புனம்காக்கும் பேதையின்
நலந்தனை அறிய
நம்பிராஜன் ஏகிட
வேடனாய் வந்தவன்
வேங்கை மரமானான்
நல்லதோர் துணையாக
மரமொன்று வந்ததை
மனதிற்குள் எண்ணி
மகிழ்திட்டான் தகப்பனும்
இம்மரம் இவளுக்கு
இனிய துணையாகுமென
இயல்பாய் உரைத்து
அன்றே உரைத்தான்
அழகிய வாக்கு
பின்னுமொரு வேடமிட்டான்
முதுகிழவன் ஆனான்
மூப்பின் திறமெலாம்
முற்றிலும் வீணே
பசிக்குத் தினைமாவும்
தேனும் தந்தாள்
சற்றேனும் மசியாத
சீவனின் பிடிவாதம்
சண்முகனை அசைத்தது
எத்தனை முயற்சியும்
பலிக்கவில்லை அவளிடம்
சரணடைந்தான் மூலவனை
ஆனைமுகனை வேண்டி
அண்ணா வாருங்கள்
இச்சீவனை கடைத்தேற்ற
எனக்கு உதவுங்கள்
ஐங்கரனும் வந்தான்
காட்டுயானை உருவத்துடன்
ஒற்றையானை வந்தது
மரத்தின்பின் நின்றது
மனத்திட்பம் கொண்டாளை
மதகரி பற்றியது
சுழற்றி தூக்கியது
பெண்மகள் மயங்கிளான்
ஞானத்தின் உருவம்
ப்ரவணத்தைச் சொல்லி
மயக்கம் தெளிவித்தது
அறிந்துகொண்டாள் நங்கையும்
இனியவனை மறவாள்
ஏங்கியே இருந்தாள்
என்றுமவன் நினைவே
சிந்தையில் கொண்டோரை
சந்ததம் காப்பவன்
சக்தியுமை பால
சற்றே இரங்கினான்
கரங்கொள்ள வந்தான்
சமர்புரிந்து சூர்வென்ற
ஓங்காரப் பரம்பொருள்
சினந்தணிந்து அமர்ந்து
சீர்மிகு வள்ளியுடன்
தணிகை மலையிலே!
ஆறிரு தடந்தோள்
வாழ்க
அறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய்
தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க
வெவ்வேள் ஏறிய் மஞ்ஞை வாழ்க
ஆனைத்தன் அணங்கு
வாழ்க
மாரிலா வள்ளி வாழ்க
வாழ்க் சீரடியாரெல்லாம்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு
அரோகரா
ஞானவேல் முருகனுக்கு அரோகரா
சக்திவேல் முருகனுக்கு அரோகரா!
பழமுதிற்சோலை
—————————-
பக்தியிலே திளைத்து
பாக்கள் பலபுனைந்து
பழுத்ததொரு பழமாம்
ஔவையின் ஞானத்தை
புடமிட எண்ணி
நடத்தினான் நாடகம்
பசித்திருந்த மூதாட்டி
பழம்வேண்டி நிற்க
சுட்டபழம் வேண்டுமா
சுடாதபழம் வேண்டுமா
சுட்டுக்குறி போட்டான்
சுப்பிரமணிய குருவும்
சூக்குமம் அறியாத
ஔவையும் இருந்தாள்
விழுந்த பழங்களை
மண்போக ஊதினாள்
சட்டென்று விழுந்தது
கேள்வி அவளுக்கு
என்ன? பழம்சுடுகிறதா
சுட்டது அகந்தையை
தொட்டது அறிவினை
ஞானக்கண் திறந்தது
மனமும் தெளிந்தது
ஞானத்தின் வடிவான
ஞானபண்டிதனை நாம்
அஞ்ஞானம் அழித்து
ஞானத்தை வேண்டி
நாளும் தொழுதிட
நம்பும் அடியார்க்கு
நன்மைகள் அருள
நீலமயில் மீதுவரும்
கோல முருகனை
கும்பிட்டு வணங்கிட்டால்
குறைவிலா பகதியும்
நிறைவான நிம்மதியும்
அகந்தையிலா மதியும்
ஆறுமுகன் அருளிடுவான்!
தேடிவரும் பக்தருக்கு
அனுதினமும் அருள்பவன்
மாதிருவர் இருபுறம்
மனமுவந்து அருள்தர
மேலான அறிவை
மேன்மைமிகு ஞானத்தை
மால்மருகன் வழங்குவான்!
ஆறுமுகமான பொருள்
நீயருள வேண்டும்
ஆதி அருணாசலம்
அமர்ந்த பெருமாளே!