சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: மெரினா, தலைமைச் செயலகம் முன் திரண்டவர்கள் கைது!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் மற்றும் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரிப்பன் மாளிகை முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று (டிச.12) தூய்மைப் பணியாளர்கள் முதலில் சென்னை மெரினா காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து கலைஞர் நினைவிடம் அருகே தூய்மைப் பணியாளர்களின் மற்றொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மதியம் 12.30 மணியளவில் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
எராளமான பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், தங்கள் கோரிக்கைள் ஏற்கப்படவில்லையென்றால் சென்னை முழுவதும் போராட்டம் தொடரும் என்று எச்சரித்துள்ளனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர். அப்போது அவர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தூய்மைப்பணியாளர் ஒருவர் கண்ணீர் மல்கப் பேசும்போது, “எங்களால் ஒழுங்காக வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை. எங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் வீதியில் வீசப்பட்டுள்ளது. எங்களின் பிள்ளைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். யாரும் எங்கள் மீது துளியும் அக்கறை காண்பிக்கவில்லை. ஐந்து மாதங்களாக சிரமப்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?