சேலம், அக்.30-
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளில் 3,264 வாக்குச்சாவடிகளில் 15,01,096 ஆண் வாக்காளர்களும், 15,29,075 பெண் வாக்காளர்களும், 366 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 30,30,537 வாக்காளர்களும் உள்ளனர், என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் 2,34,154 வாக்காளர்களும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,45,655 வாக்காளர்களும், ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் 2,87,642 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். அதேபோல, ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 3,06,130 வாக்காளர்களும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 2,82,129 வாக்காளர்களும், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 2,93,749 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 2,75,901 வாக்காளர்களும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 3,08,892 வாக்காளர்களும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 2,73,971 வாக்காளர்களும், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 2,56,166 வாக்காளர்களும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 2,66,148 வாக்காளர்களும் என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளில் 3,264 வாக்குச்சாவடிகளில் 15,01,096 ஆண் வாக்காளர்களும், 15,29,075 பெண் வாக்காளர்களும், 366 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 30,30,537 வாக்காளர்களும் உள்ளனர்.
டிசம்பரில் வரைவு பட்டியல்
2026ம் ஆண்டு ஜன., 1ம் தேதி தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, பயிற்சி, கணக்கீட்டிற்கான காலம், வாக்குச்சாவடி நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் திருத்தியமைத்தல் கட்டுப்பாட்டு அட்டவணையை மேம்படுத்துதல் மற்றும் வரைவுப் பட்டியலைத் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் டிச. 12ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2026ம் ஆண்டு பிப்., 07ம் தேதி வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் எளிதில் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்க்கும் விதமாக voters.eci.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட பிஎல்ஓ-க்களிடம் படிவம் 6-ஐ நேரடியாகவும் வழங்கலாம். பொதுமக்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரையோ அல்லது வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தீவிர திருத்தம் சிறப்பு உதவி மையத்தின் 1950 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரத்தினை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.