சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்வதில் புதிய நடைமுறை: வாகனத்தை ஆர்டிஓ அலுவலகம் கொண்டு செல்லத் தேவையில்லை
Dec 04 2025
29
சென்னை: சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகங்களுக்கு இனி வாகனங்களை கொண்டு செல்ல தேவையில்லை. இந்த புதிய நடைமுறை நேற்று அமலானது.
தமிழகத்தில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ அலுவலகம்) உள்ளன. இங்கு ஓட்டுநர் உரிமங்கள், நடத்துநர் உரிமங்கள், பழகுநர் உரிமம், வாகன பதிவுகள், சாலை வரி செலுத்துதல் போன்ற பணிகள் செய்து தரப்படும்.
புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது, ஆர்டிஓ அலுவலகத்துக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதனால் வாகனத்தின் உரிமையாளரோ அல்லது டீலரோ, ஆர்டிஓ அலுவலத்துக்குச் செல்ல வேண்டும்.
இந்நிலையில் மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின்படி, சொந்த பயன்பாட்டு வாகனங்கள் பதிவின்போது, அவற்றை அலுவலகத்துக்கு கொண்டு வரத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், சொந்த பயன்பாட்டுக்கான புதிய வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வருவதில் விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சொந்த பயன்பாட்டுக்கான புதிய வாகனங்களை பதிவு செய்ய, ஆர்டிஓ அலுவலகத்துக்கு கொண்டு வர தேவையில்லை என்ற நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: புதிய நடைமுறையால் டீலர்களே, வாடிக்கையாளரின் ஆவணங்களை வாஹன் இணையதளத்தில் பதிவேற்றி, பதிவுக்கட்டணம் மற்றும் சாலை வரியைச் செலுத்தி, ஆன்லைனிலேயே பதிவை முடிக்கலாம்.
ஆன்லைனிலேயே கட்டணங்கள் செலுத்தப்படுவதால், யாருக்கும் தேவையின்றி பணம் கொடுக்க வேண்டிய நிலை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?