ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: ஜெர்மனி அணி 8-வது முறையாக ‘சாம்பியன்’அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்தியா

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: ஜெர்மனி அணி 8-வது முறையாக ‘சாம்பியன்’அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்தியா



ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஸ்பெயினை வீழ்த்தி 8-வது முறையாக கோப்பையை முத்தமிட்டது.


14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) கடந்த 28-ந்தேதி சென்னை மற்றும் மதுரையில் தொடங்கியது. தமிழ்நாட்டில் முதல்முறையாக நடந்த இந்த ஆக்கி திருவிழாவில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்று லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் மோதின.


இதன் முடிவில் அரைஇறுதியில் தோல்வியை தழுவிய முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், அர்ஜென்டினாவும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நேற்று மாலை சந்தித்தன. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அரங்கேறியஇந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் அர்ஜென்டினாவின் கை ஓங்கியது. 3-வது நிமிடத்திலேயே அர்ஜென்டினாவின் நிகோலஸ் ரோட்ரிக்ஸ் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பில் கோல் போட்டு அதிர்ச்சி அளித்தார். இதனால் முதல் பாதியில் இந்தியா 0–-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.


பிற்பாதி தொடங்கிய உடனே இந்தியாவுக்கு அடுத்தடுத்து 4 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கடைசியில் பந்தை வெளியில் அடித்து வீணடித்தது மட்டுமே மிச்சம். 44-வது நிமிடத்தில் சக வீரர் தட்டிக்கொடுத்த பந்தை அர்ஜென்டினாவின் சான்டியாகோ பெர்னாண்டஸ் ஓங்கி அடித்து வலைக்குள் அனுப்பினார். இதனால் அந்த அணி 2-–0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.


இந்திய வீரர்கள் தங்களது வியூகத்தை மாற்றிக் கொண்டு கடைசி கால்பகுதியில் (15 நிமிடங்கள்) மேலும் ஆக்ரோஷமாக துடிப்புடன் ஆடினர். அதன் பலனாக 49-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்தியாவின் அங்கித் பால் கோலாக்கினார். 52-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்மீத்சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார்.


இந்த பரபரப்பான சூழலில் கோல் எல்லைக்குள் அர்ஷ்தீப்சிங்கை எதிரணி வீரர் முழங்கையால் இடித்து தள்ளிவிட்டதால் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை நடுவர் வழங்கினார். அதை ஷர்தானந்த் திவாரி (57-வது நிமிடம்) கோலாக்கி அமர்க்களப்படுத்தினார். இதனால் இந்தியா 3–-2 என்று முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கியது. இந்தியாவுக்கு மேலும் ஒரு கார்னர் வாய்ப்பு (58-வது நிமிடம்) கிட்டியது. கோல் கீப்பர் இல்லாததால் இந்த வாய்ப்பில் அன்மோல் எக்கா எளிதில் கோலாக்கினார்.


திரில்லிங்கான ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4–-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை பதம்பார்த்து 3-வது இடத்திற்குரிய வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது. 2016-ம் ஆண்டில் சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பிறகு பதக்கமேடையில் ஏறியது இதுவே முதல் முறையாகும். முந்தைய இரு சீசனில்4-வது இடமே பெற்றிருந்தது.


இரவு 8 மணிக்கு அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியும், ஸ்பெயினும் கோதாவில் குதித்தன. நேர முடிவில் ஆட்டம் 1-–1 என்ற கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-–2 என்ற கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்து 8-வது முறையாக மகுடம் ஆடியது. இதற்கு முன்பு 1982, 1985, 1989, 1993, 2009, 2013, 2023ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை வென்றிருந்தது.


2-வது இடம் பிடித்த ஸ்பெயினுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஜூனியர் உலகக் கோப்பையில் அந்த அணியின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%