டெல்லியில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு எதிரொலி: பழைய சொகுசு கார்கள் குறைந்த விலையில் விற்பனை
Jul 07 2025
152

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த 10 ஆண்டுகள் பழைய டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பெட்ரோல் வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்க டெல்லி அரசு தடை விதித்தது.
இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலையில், அரசு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், பழைய வாகனங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தங்களுடைய பழைய வாகனங்களை டெல்லிவாசிகள் அவசர அவசரமாக விற்பதில் மும்முரமாக உள்ளனர். ரூ.1 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கிய மெர்சிடஸ் உள்ளிட்ட சொகுசு வாகனங்கள் வந்த விலைக்கு விற்கும் நிலை உருவாகி உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி பழைய வாகன விற்பனையாளர்கள் வட்டாரம் கூறும்போது, ‘‘டெல்லி அரசின் ஸ்கிராப் பாலிசியால் 10, 15 ஆண்டுகளை நெருங்கும் பழைய டீசல், பெட்ரோல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தகவல் வெளியானதால், வாகன உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே, பழைய வாகனங்களை கிடைத்த விலைக்கு விற்க துடிக்கின்றனர். பல கோடிகளில் வாங்கப்பட்ட மெர்சிடஸ் வாகனங்கள் இன்று வெறும் ரூ.3 லட்சத்துக்கு கூட விற்பனைக்கு உள்ளது. வெளிமாநிலங்களில் இதன் விலை இன்றும் ரூ.20 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து வழக்கத்துக்கு மாறாக பழைய வாகனங்கள் குறித்து அதிகம் பேர் விசாரிக்கின்றனர்’’ என்றனர்.
டெல்லியில் பழைய வாகனங்கள் குறித்த அச்சம் நிலவினாலும், பிற மாநிலங்களில் மேலும் 5 ஆண்டுகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக, டெல்லியில் பழைய வாகனங்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இங்கிருந்து தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு அனுப்பப்படும் பழைய வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பழைய வாகனங்களுக்கான பதிவுகளை நீட்டிக்க அதிக கட்டணங்களை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக மற்ற மாநிலங்களிலும் டெல்லியைப் போல் பழைய வாகனங்களுக்கானக் கட்டுப்பாடுகள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய வாகனங்கள் அகற்றப்படுவால் புதிய வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?