தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும்: தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும்: தேர்தல் ஆணையம்



சென்னை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


சென்னை தி.நகர் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வாக்குச்சாவடி அதிகாரிகள், சுமார் 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக குற்றம்சாட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்திய நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


‘கடந்த 1998-ம் ஆண்டு தி.நகர் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 349 வாக்காளர்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி, வெறும் 36,656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்துள்ளனர். வளர்ந்து வரும் மக்கள்தொகை பெருக்கத்துக்கும், வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.


அதிமுக ஆதரவு மனப்பான்மையில் உள்ள 13 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து திருத்திய சரியான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.


தலைமை நீதிபதி வஸ்தவா, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.


தேர்தல் ஆணையம் தரப்பில், ‘தமிழகம் உட்பட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும். அப்போது மனுதாரரின் புகார்கள் குறித்தும் பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பிஹார் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News