தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி, ஆக. 18–
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அங்கேயும் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் பதிவு செய்து வருகின்றன.
கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் 4 வாரங்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆகஸ்ட் 21ம் தேதியுடன் இக்கூட்டத் தொடர் நிறைவடையுள்ளது.
கடந்த 4 வாரங்களில் அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் குறுகிய நேரம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதேநேரம் பிற பணிகள் தொடர்ந்து முடங்கியுள்ளன.
பீகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. எனவே, இறுதி வாரத்திலும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்து வரும் என தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் அனைவரும் இருக்கைக்கு செல்லுங்கள். தொடர்ந்து அமளியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தார்.
மேலும், சட்டசபையில் அரசு சொத்துக்களை உறுப்பினர்கள் சேதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. நீங்கள் அவ்வாறு முயற்சித்தால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் மக்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியது. வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான மசோதாவை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்து, விளக்கம் அளித்து பேசினார். அப்போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் இன்று காலை மாநிலங்களவை கூடியதும் பீகார்வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்து தலைவர் ஹரிவன்ஷ் உத்தரவிட்டார்.
இதனிடையே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது பீகாரில் வாக்காளர் நீக்கப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.