பிரயாக்ராஜ், ஜன.-
மவுனி அமாவாசையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் 3 கோடிக்கு மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா மேளா நடந்து வருகிறது. இதையொட்டி, பக்தர்கள் வசதியாக புனித நீராடுவதற்காக, 12 ஆயிரத்து 100 அடி நீளத்துக்கு குளியல் படித்துறைகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் நேற்று மவுனி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த தினத்தில் கங்கையில் புனித நீராடுவதை வடமாநில மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
3.15 கோடி பேர் புனித நீராடினர்
இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் உள்ள படித்துறைகளுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல், அனைத்து திசைகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவுப்படி, அவர்கள் மீது ஹெலிகாப்டர்களில் இருந்து பூக்கள் தூவப்பட்டன.
இதுதொடர்பாக மகா மேளா கோட்ட ஆணையாளர் சவும்யா அகர்வால் கூறியதாவது:-
பகல் 12 மணிக்குள் திரிவேணி சங்கமத்தில் 3 கோடியே 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் புனித நீராடினர். கடந்த மகர சங்கராந்தி தினத்தில் 1 கோடியே 3 லட்சம் பேரும், ஏகாதசி நாளில் 85 லட்சம் பேரும் புனித நீராடினர். தை அமாவாசைக்கு அதைவிட பல மடங்கு அதிகமானோர் புனித நீராடி உள்ளனர். பக்தர்கள் சரியான திசையில் நடந்து செல்வதற்காக கம்பங்களில் பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களை வழிநடத்த தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
800 ஹெக்டோ் கொண்ட மகா மேளா பகுதி, 7 செக்டார்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மையை பராமரிக்க 3 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புனித சடங்குகள் செய்ய விரும்பும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக தியானம் செய்வதற்கான வசதிகளுடன் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மகா மேளா பகுதியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக போலீஸ் சூப்பிரண்டு நீரஜ் பாண்டே தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?