
தூத்துக்குடி:
திருச்செந்தூரில் 3-வது நாளாக 70 அடிக்கு கடல் உள்வாங்கி காணப்பட்ட நிலையில், பக்தர்கள் பாறைகள் மீது நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்றது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருகோயில். இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக திருவிழா நாட்களில் மற்றும் விடுமுறை தினங்களிலும் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா நாட்கள், விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள்.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள கடலில் புனித நீராடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். சமீப காலமாக கோயில் முன்புள்ள கடல் பருவநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைமைக்கு திரும்புவதும் வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் நீர் உள்வாங்கியும் காணப்படும்.
இதற்கிடையே, அமாவாசை முடிந்து 3 நாட்கள் ஆகியும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இன்றும் (ஆகஸ்ட் 25) மூன்றாவது நாளாக திருச்செந்தூர் முருகன் கோயில் முன்புள்ள கடல் நீர் உள்வாங்கி காணப்படுகிறது. செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 70 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
கடல் உள்வாங்கி காணப்படுவதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவு வெளியே தெரிகின்றன. அதன் மேல் நின்று பக்தர்கள் புகைப்படம் எடுப்பது, செல்ஃபி எடுப்பது என்று ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகின்றனர். மேலும், சிலர் கடல் உள்வாங்கி காணப்படும் பகுதியில் அந்த 70 அடியை தாண்டியும் கடலுக்குள் சென்று நீராடி வருகின்றனர். ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கும் பக்தர்களை கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?