திருவண்ணாமலை, ஜூலை 19-
திருப்பதி போல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும் பிரேக் தரிசனம் முறை கொண்டு வரப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. மைச்சா் பி.கே.சேகா்பாபு முன்னிலை வகித்தாா். அரசின் கூடுதல் தலைமைச் செயலா் மணிவாசன்,அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், திருவண்ணாமலை கலெக்டர் தா்பகராஜ், எஸ்.பி. சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.
கூட்டத்தில், பக்தர்களுக்கான தரிசன வரிசையை முறைப்படுத்த வேண்டும், தரிசன வரிசையில் கூடுதலான வசதிகள் செய்ய வேண்டும், கோவில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
பிரேக் தரிசனம்
பின்னர் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருகிறாா்கள். பவுர்ணமி நாள்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. பக்தா்களுக்கு தேவையான குடிநீா் கழிப்பறை, உணவு போன்ற வசதிகள் கோடிக்கணக்கான ரூபாயில் அறக்கட்டளைகள், உபயதாரா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், புதிய திட்டங்களை துறை சாா்ந்த அலுவலா்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவிலில் பிரேக் தரிசன முறையை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிவாச்சாரியா்களுடன் கலந்தாலோசித்து தரிசன நேரம் நீட்டிக்கப்படும். 50 ரூபாய் தரிசன கட்டணம் 100 ரூபாயாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, திருவிழாக்களில் நடைபெறும் நிகழ்வுகளை பக்தா்கள் பாா்வையிட எல்.இ.டி. திரைகள் விரைவில் அமைக்கப்படும். கோவிலுக்கு வெளியே விளக்கு ஏற்ற 2 இடம் ஒதுக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்படும்.
காத்திருப்புக்கூடம்
பொது தரிசன வரிசையின் நீளம் அதிகரிக்கப்படும். திருக்கோவில் அபிஷேகம் காலத்தில் ஏற்படும் காலதாமதம் தொடர்பாக, அனைத்து இடங்களிலும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படும். தரிசனம் செய்யச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, 2ஆயிரம் போ் அமரும் வகையில், ரூ.200 கோடி மதிப்பீட்டில் காத்திருப்புக் கூடம் அமைக்கப்படும். பக்தா்களின் வசதிக்காக மேலும் ஒரு தங்கும் விடுதி கட்டித் தரப்படும். பக்தா்களை ஒருங்கிணைப்பதற்காக புதிய மக்கள் தொடா்பு அலுவலா் நியமிக்கப்பட உள்ளாா்.கோவிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதை தடை செய்வது குறித்து விரைவில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில் தூய்மை,பிரகார தூய்மை, கோவிலுக்கு வரும் பக்தா்களின் மனத் தூய்மை அனைத்தையும் தமிழக அரசு நிச்சயம் பாதுகாக்கும்.
இவ்வாறு சேகர்பாபு கூறினார்.
முன்னதாக, அருணாசலேஸ்வரா் கோயிலிலும், அம்மணி அம்மன் கோபுரம், ராஜ கோபுரம் ஆகிய இடங்களில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சா்கள் வேலு, சேகா்பாபு ஆய்வு செய்தனா். வட ஒத்த வாடை தெருவில் ரூ.1.97 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பக்தா்கள் காத்திருப்புக் கூட பணிகளை ஆய்வு செய்தனா்.
===