நெரிசல்….நெரிசல்….. நெரிசல்… வர, வர இந்த வார்த்தை, ஒரு அலர்ஜி ஆயிடுச்சு.
தீபாவளி, பொங்கல்னு,எது வந்தாலும்,
TV காரன் , கேமராவை தூக்கி்ண்டு ரோட்டெல்லாம் சுத்தத் தொடங்கிடுவான். .
வீக் எண்ட் நெரிசல்,விழாக்கால நெரிசல்,
பண்டிகை நெரிசல்,பப்ளிக் ஹாலி டே நெரிசல். அப்பப்பா எத்தனை….. எத்தனை நெரிசல்.
லிஸ்ட் போட்டா நீண்டு கிட்டே போகுதுங்க.
முன்னெல்லாம் இந்த நெரிசல் எங்க இருக்கும், எப்படி இருக்கும். கெஸ் பண்ணமுடியும். கணக்கு போட்டு ரூட்டை மாத்திக்கலாம்.
இப்பெல்லாம், எதுக்கும் அடங்காத கூட்டம்.
எங்க கூடுது,எப்படி கூடுதுங்கிறது . ஒண்ணுமே புரியல்லைங்க. எங்க பார்த்தாலும் ஒரே நெரிசல்.
தீபாவளி, துலாக் காவேரி ஸ்நானம், ரங்கநாதர் தர்சனம்னு, பிளான் பண்ணிட்டு, எங்க பாரம்பரிய வீட்டை நோக்கி பயணிக்க, காரில் ஏறினோம். மொபைலை ஆன் பண்ணி, GPS ஐ தேடினேன்.
பல்லாவரத்தில் பாலம் வரை ரெட் லைன் காட்டுது.
அடுத்து பெருங்களத்தூர். அங்கிருந்து இரண்டு கிலோமீட்டருக்கு ரெட் காட்டுது.
“என்ன பண்ணலாம்” மனசுக்குள் ஒரு திக் திக்.
இன்னொரு மனசு “பெருங்களத்தூரை ரீச் பண்றதுக்குள்ள, டிராஃபிக் கிளியர் ஆயிடும்”. குருட்டு நம்பிக்கை.
சாலையில் நீந்தத் தொடங்கினோம்.அப்பா, அம்மா பின் சீட்டில். பக்கத்தில் என் மனைவி.
ஓடத் தொடங்கிய வண்டி, மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது.
சிக்னலை கடக்க அரை மணி நேரம். எரிச்சல் அதிகமாச்சு.
நெரிசல் கரைஞ்சு, கொஞ்சம் கருணைக் காட்டியது.
பெருங்களத்தூரை தொட்டோம். சிவப்பு நிறம் மீண்டும் நீளத் தொடங்கியது.
”செங்கல்பட்டு டில் கேட். தாண்டிட்டா பிரச்சனை இருக்காதுப்பா”.என் அப்பாவுக்கு சமாதானம் சொன்னேன்.
இன்ச்,இன்ச்சா நகரத் தொடங்கிய வண்டி, நாலு மணிநேரம் கழிச்சு, செக்போஸ்டைத் தொட்டது.
பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதையில் சிவப்புக் கோட்டைக் காணோம்.
வேகமெடுத்தேன். திடீரென்று திண்டிவனம் வரை மீண்டும் சிவப்புக் கோட்டின் ஆக்ரமிப்பு.
டீ க்கடை பக்கம் திரும்பினால் ஒரே கூட்டம்.டீ குடிக்கும் ஆசையும் போச்சு.
ரோட்டை விட்டு இறங்கினால்,வரிசை கட்டி நிற்கும் வண்டிகளின் இடுக்கில், மீண்டும்
நுழைய முடியாது .காலும், கையும் பிரேக்கிலும்,கீரிலும்.
பின் சீட்டில் அப்பாவும்,அம்மாவும் அசதியால் தூக்கத்தில் ஆழ்ந்தனர்.
திருச்சி வரை இந்த சாகசம் தொடர்ந்தது.கை,கால்கள் அசந்து போக,,மெல்ல எட்டிப் பார்த்தேன்.கொள்ளிடம் பாலம். அடியில் ஆற்று வெள்ளம். ஊரைத் தொட்ட குஷியில் நிமிர்ந்து பார்த்தேன்.
ராஜ கோபுர தரிசனம்.
“ரங்கா ! ரங்கா !!” ஆசையோடு அழைத்தேன்.
நல்லபடியா அழைச்சிண்டு வந்துட்ட . உனக்கு கோடி நமஸ்காரம்.
பொழுது பொல பொலவென விடிஞ்சிண்டிருக்கு. வாண்டுகளும்,வாலிபர்களும் , மாட வீதிகளில் ,மத்தாப்பு, மகா லக்ஷ்மி வெடின்னு சுறு சுறுப்பாயிட்டாங்க.
சில்க் புடவை சகிதம் ஸ்ரீ ரங்கத்து தேவதைகள். தேர் போல், தெருவெல்லாம் பவனி வராங்க.
பாட்டியும், தாத்தாவும் எங்கள் வரவை எதிர் பார்த்து கண் கொட்டாமல் காத்துண்டு இருக்க,.
என்னைப் பார்த்ததும் ஓடி வந்த என் பாட்டி,
” ஏண்டா பேராண்டி.இவ்வளவு லேட் பண்ணிட்ட ..தீபாவளியே முடியப்போகுதுடா. எல்லாரும் சீக்கிரம் போய் ஸ்நானம் பண்ணிட்டு வாங்கோ”. பாட்டி அவசரப்படுத்தினாள்.
அசதி…..அசதி.. ஆளுக்கு ஒரு பக்கம் ரெஸ்ட் எடுக்கப் போனோம்.
“எல்லாரும் சீக்கிரமா புது டிரெஸ்ஸ போட்டுண்டு வாங்கோ”.
குரல் கொடுத்த தாத்தா,பூஜையை முடிச்சுட்டு போஜனத்துக்கு காத்திருந்தார்.
ஆற அமர இல்ல.அரக்க பறக்க சாப்பிட்டேன்.
“எதுக்குடா இவ்வளவு அவசரம்”
“தாத்தா… நான் உடனே கிளம்பணும்”.
“நாளைக்குத்தான் கவர்ன்மெண்ட் ஹாலி டேன்னு சொல்லிட்டானே”
“ஆமாம். அதனால் தான் இன்னிக்கே கிளம்பறேன் தாத்தா”.
“நாளைக்கு கிளம்பினா,அவ்வளவுதான்.
சிவப்பு கம்பளம் போல் ரெட் லைன் சென்னை வரை விரிச்சு வச்சு, தேரைப் போல் நகர விட்டுடுவான் .
நாளைக்கு சென்னைக்கு திரும்பறவன் அத்தனை பேரும் திக்குமுக்காடுவான் தாத்தா”.
“இன்னிக்கு ரோட்டெல்லாம் வெள்ளைக் கோட்டில் மிதக்குது பார்”.
“என்னமோ போடா.நிந்து நிதானமா தீபாவளி கொண்டாடினோம்னு இல்லாம போச்சு.
வர,வர வாழ்க்கையே ஒரு நெரிசல்ல மாட்டிக்குச்சோ”.
தாத்தாவின் சலிப்பு இன்னும் ஒரு படி மேல போச்சு.
“அப்படி இல்ல தாத்தா…..
இதெல்லாம் ஒரு திரில்.அதன் சுகமே ஒரு தனி.. தாத்தா”
“என்ன திர்லோ” பொக்க வாய் கொண்டு உரக்கச் சிரித்தார் தாத்தா.

சுந்தர மணிவண்ணன்.