கிரிஜா அன்று காலையிலிருந்தே மிகவும் சந்தோஷமாய் இருந்தாள்.
அதற்குக் காரணம்... அவளுடன் எந்தவித எதிர்பார்ப்புமில்லாத நாகரீகத்துடன் கடந்த இரண்டு வருடங்களாக முகநூல் தோழராக இருந்த சுந்தரவதனம் இன்று சிங்கப்பூரிலிருந்து வரப் போகிறார்.
கிரிஜாவை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறார், என்கிற காரணம்தான்.
பாசத்திற்காக ஏங்கிய அவளது மன வயலுக்கு அன்பு நீர் பாய்ச்சி, ஆறுதல் உரம் வார்த்து, துயரம் என்னும் களைகளை அழித்தவர் சுந்தரவதனம், என்னும் ஐம்பத்தியேழு வயது பேச்சிலர்.
கிரிஜாவுக்கு வயது 23 என்பது அவருக்கும், அவருக்கு வயது 57 என்பதும் இவளுக்கும் தெரியும். ஆனாலும் வயதைக் கடந்த ஒரு நட்புறவு அவர்களுக்குள் தொடர்ந்தது.
அந்த இறுக்கமான நட்புறவை தினமும் முகநூல் வாயிலாக பேசிப் பழகி மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டனர் இருவரும்.
காலையில் உமன்ஸ் ஹாஸ்டலில் சீக்கிரமாக எழுந்து, வேக வேகமாய்க் கிளம்பிய கிரிஜாவிடம், "என்னடி... இன்னைக்கு அந்த சிங்கப்பூர் பூமர் அங்கிள் வருதா?... ரெண்டு பேரும் மீட்டிங்... டேட்டிங்... அப்படித்தானே?" அறைத் தோழி கிண்டல் அடித்தாள்.
கிரிஜா அவளை முறைக்க, "முறைக்காதடி... எனக்கென்னமோ அந்தப் பெருசு ரொம்பவே பணக்காரர் போலத் தெரியுது.. பேசாம வயசு வித்தியாசம் பார்க்காம அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டு லைஃப்ல செட்டிலாயிடு" என்றாள் அறைத்தோழி.
கோபமாய் வெளியேறினாள் கிரிஜா.
சரியாக ஒன்றரை மணிக்கு வந்திறங்கிய விமானத்திலிருந்து இறங்கியவரை, கையில் "சுந்தரவதனம்" என்று பொறிக்கப்பட்ட பதாகையுடன் வரவேற்றாள்.
பரஸ்பர ஷேமநல விசாரிப்புக்கு பின் இருவரும் கால் டாக்ஸி பிடித்து நகரத்தின் மிகப் பெரிய ரெஸ்டாரண்டில் இறங்கி, மதிய உணவை ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தனர்.
அந்தக் காத்திருப்பு நேரத்தில் இரண்டு வருடங்களாகத் தான் மறைத்து வைத்திருந்த தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொன்னாள் கிரிஜா.
"எனக்கு விவரம் தெரியாத வயதில் தாய் தந்தை இருவரும் இறந்து போன பின் நான் ஒரு அனாதை ஆசிரமத்தில் தங்கியிருந்து படித்தேன்... படித்து முடித்த பின் ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்தது... தற்போது.. ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறேன்" கண்ணீரோடு கூறியவளிடம் சுந்தரவதனமும் தன் கதையைக் கூறலானார்.
அவளைப் போலவே அவரும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, அண்ணன் மற்றும் அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்ததையும், ஒரு கட்டத்தில் அவர்களோடு ஏற்பட்ட சிறிய பிணக்கு காரணமாய் வீட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் சென்று விட்டதையும் சோகமாய் கூறினார்.
"ஸோ.. வீ போத் ஆர் என் ஸேம் போட்" என்றாள் கிரிஜா.
ஒரு சிறிய அமைதிக்குப்பின் சுந்தரவதனம் கேட்டார். "உன் எதிர்காலத்தை பற்றி நீ என்ன முடிவு செய்திருக்கிறாய் கிரிஜா?"
சில வினாடிகள் தலை குனிந்தபடி யோசித்த கிரிஜா அதே கேள்வியைத் திருப்பி அவரிடமே கேட்டாள்.
நெளிதாய் சிரித்த சுந்தரவதனம், "நான் சொன்னா நீ கோவிச்சுக்க கூடாது"
"சொல்லுங்க"
'தவறாகவும் நினைக்கக் கூடாது"
"நிச்சயம் நினைக்க மாட்டேன் சொல்லுங்க"
"வந்து... நாம ரெண்டு பேரும் நமக்குள் எந்தவித உறவையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்!... இதே போல் நண்பர்களாக.. நல்ல நட்புறவோடு மட்டுமே இருக்கலாமென்று நினைக்கிறேன்!" தயக்கமாய் சொன்னார்.
விழிகளை விரித்த கிரிஜா ,"மை காட்... சத்தியமா சொல்றேன் நானும் இதையேதான் சொல்ல நினைத்தேன்!.. தெரிஞ்சோ... தெரியாமலோ... ஏதாவதொரு உறவு வலையில நாம சிக்கிட்டா நிச்சயம்... பல சிக்கல்கள் வரும்!.. ஸோ... நட்பே போதும்" என்றாள்.
"தெய்வீகமே நட்பு" என்றார் சுந்தரவதனம்.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயம்புத்தூர்.