
நாசிக், அக்.18-–
எச்.ஏ.எல். நிறுவனத்தால் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது தேஜஸ் எம்.கே.1ஏ இலகுரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
இந்திய விமானப்படையில் இலகுரக போர் விமானமான தேஜஸ் ரக போர் விமானங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த சூழலில், மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள எச்.ஏ.எல். (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) நிறுவனம் தேஜஸ் எம்.கே.1ஏ. என்ற இலகுரக போர் விமானத்தை தயாரித்து உள்ளது. இது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானம் ஆகும். இதன் சோதனை ஓட்டம் நேற்று நாசிக்கில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடந்தது. இந்த விமானம் வெற்றிகரமாக வானில் சீறி பாய்ந்து மீண்டும் தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட்) வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேஜஸ் எம்.கே.1ஏ ரக விமானம் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை முடித்ததால் எச்.ஏ.எல். நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இது இந்திய பாதுகாப்புத்துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹெச்.டி.டி.-40 மற்றும் எஸ்.யு.-30 எம்.கே.ஐ. என்ற பயிற்சி விமானங்களின் இயக்கத்தையும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த விமானங்களும் எம்.கே.1ஏ. போர் விமானமும் வானில் பறந்தன.
அதேபோல தேஜஸ்- எம்கே.1ஏ. இலகுரக விமானத்தின் 3-வது உற்பத்தி மையத்தையும், எச்.டி.டி-40 பயிற்சி ஜெட் விமானத்தின் 2-வது உற்பத்தி மையத்தையும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இதன் மூலம் எச்.ஏ.எல். நிறுவனத்தால் ஆண்டுக்கு குறைந்தது 24 இலகுரக விமானங்களை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, இப்போது இந்தியா தனது சொந்த மண்ணிலேயே 65 சதவீத ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்கிறது. மிக விரைவில் நமது உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியை 100 சதவீதத்திற்கு கொண்டு செல்வதே எங்கள் இலக்காகும்.
2029-ம் ஆண்டுக்குள் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ரூ.3 லட்சம் கோடியையும், ராணுவ பொருட்கள் ஏற்றுமதியில் ரூ.50 ஆயிரம் கோடியையும் அடைய நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?