நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Jul 24 2025
14

புதுடெல்லி, ஜூலை 22–
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைக் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பீகாரில் சிறப்பு தீவிர மதிப்பாய்வு (எஸ்.ஐ.ஆர்.) விவகாரம் பற்றி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின.இந்த எஸ்.ஐ.ஆர். விவகாரத்தின்படி பீகாரில் வாக்காளர் பட்டியலில் மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஒரு வெளிப்படையான, சுதந்திர மற்றும் சிறந்த முறையிலான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதில் இந்த பட்டியல் முக்கியத்துவம் பெறுகிறது.
இதன்படி, குடிமக்கள் அல்லாதோர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும், பிரிவு 19-ன்படி பட்டியலில் சேர்க்க அனுமதிக்கப்படுவர். இந்த எஸ்.ஐ.ஆர். விவகாரம் பற்றி அவையில் பேச ராகுல் காந்தியை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு நடைபெறும் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பணிகளின் கீழ் அந்த மாநிலத்தில் 2003ம் ஆண்டுக்குப் பின்னர், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், பாஸ்போா்ட் நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் தாக்கல் செய்த மனுக்களை சமீபத்தில் விசாரித்த சுப்ரீம் கோர்ட், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்தது. அத்துடன் வாக்காளர்களின் குடியுரிமையை சரிபார்க்க ஆதார், வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகளையும் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?