நிலுவைத்தொகையை செலுத்தும்போது எச்சரிக்கை: சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
Aug 04 2025
12

சென்னை, ஆக.2–-
மோசடி செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபடுவதால் நிலுவைத்தொகையை செலுத்தும்போது நுகர்வோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-–
சென்னை குடிநீர் வாரியத்தின் ஊழியர்கள் என்ற பெயரில் சில நபர்கள், செல்போன் மூலம் நுகர்வோர்களை அணுகி குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டண நிலுவைத்தொகையை அவர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு யூ.பி.ஐ. செயலிகள் மூலம் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் குடிநீர், கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் கூறி பணம் பறிப்பதாக புகார்கள் வருகிறது.
நுகர்வோர்கள் நிலுவைத்தொகையை செலுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிப்பட்ட செல்போன் எண்ணுக்கு நிலுவைத்தொகையை செலுத்தக் கூறி அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நிராகரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகள் மூலம் மட்டுமே வாரியத்திற்கு நிலுவைத்தொகையை செலுத்த வேண்டும்.
அதன்படி, சென்னை குடிநீர் வாரிய இணையதளமான www.cmwssb.tn.gov.inஅல்லது நேரடி நிலுவைத்தொகை செலுத்தும் https://bnc.chennaimetrowater.in/##public/cus-loginஆகிய இணைப்புகளின் வாயிலாக செலுத்தலாம். ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளில் உள்ள பயன்பாட்டு பில் செலுத்தும் வகையின் கீழ் சி.எம்.டபிள்யூ.எஸ்.எஸ்.பி. தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பில் எண் மற்றும் செல்போன் எண்ணை உள்ளிட்டு பணம் செலுத்தலாம்.
காசோலை, வரைவோலை, டெபிட், கிரெடிட் கார்டு மூலம் 15 பகுதி அலுவலகங்கள், தலைமை அலுவலகத்தில் உள்ள வசூல் மையம் மூலம் பணம் செலுத்த முடியும். மோசடி செயல்களில் ஈடுபடுவோரிடம் நுகர்வோர்கள் தங்களது பணத்தை இழக்கும் தருவாயில் வாரியம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. மேலும் தகவல்களுக்கு 044 - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?