திருக்குறள் முற்றோதிய 122 மாணவர்களுக்கு ரூ.15000 ரொக்கப்பரிசு, சான்றிதழ்: 4–ந் தேதி அமைச்சர் சாமிநாதன் வழங்குகிறார்
Aug 04 2025
12

சென்னை, ஆக.2–
வரும் 4–ந் தேதி திங்கள்கிழமை அன்று நடைபெற உள்ள திருக்குறள் இசை- நாடக வடிவிலான நிகழ்ச்சியில், திருக்குறள் முற்றோதிய 122 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூ.15 ஆயிரத்துக்கான காசோலை, சான்றிதழ்களை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்க உள்ளார்.
மாணவர்களுக்குத் திருக்குறள் மீதான ஆர்வத்தை மேலும் கூட்டிடும் வகையில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகையும் முதலமைச்சர் ஸ்டாலினால் 2022–-2023–ம் ஆண்டு முதல் ரூ.10 ஆயிர-த்திலிருந்து ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
பாரதி திருமகன்
வில்லிசைப்பாட்டு
இத்தகைய திருக்குறளின் சிறப்புகள் ஏட்டளவில் நின்றுவிடாமல் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கேதுவாக திருக்குறளை மையமாகக் கொண்டு செல்வி வர்சா ராஜ்குமார் குழுவினரின் சங்கத்தமிழ் நாட்டிய நாடகம், தஞ்சை ஆடுதுறை பாஸ்கர் குழுவினரின் திருக்குறள் நாடகம், கலைமாமணி பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும், கலைநன்மணி கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பெறவுள்ளன.
ஈரடியால் உலகளந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையின் வளத்தக்க சிந்தனைகளை வாழ்வியல் சூழலோடு இணைத்து வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஓர் அற்புதத் திருவிழாவாக இந்நிகழ்ச்சி 4–ந் தேதி அன்று காலை 9 மணிக்கு சென்னை, அடையாறு திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கம் முத்தமிழ்ப் பேரவை மன்றத்தில் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருக்குறள் முற்றோதல் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பப் பக்கத்தை திறந்துவைத்து விழாப் பேருரை ஆற்றவுள்ளார். தமிழ் வளர்ச்சி துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன் முன்னிலையுரையும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள் வரவேற்புரையும் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் கு.ப. சத்தியபிரியா நன்றியுரையும் ஆற்றவுள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?