நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி
சென்னை, அக்.23-
நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேற்று பார்வையிட்டார். கொள்முதல் செய்யப்பட வேண்டிய நெற்கள், மழையில் நனைந்து முளைத்துவிட்டதாகவும், அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்யாததே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அவருக்கு பதில் அளித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி வருமாறு:-
எதிர்க்கட்சி தலைவர் பொய்யை உண்மைபோல சொல்லி கொண்டிருக்கிறார். நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் மூட்டைகளை ஏன் வாங்கக்கூடாது? என்று அவர் கேட்கிறார். ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 700 நெல் மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்பட்டன. தற்போது நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்கிறோம்.
2 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமானால் அதற்கு ஏற்ப இட வசதி வேண்டும். அதற்கு ஏற்ப ஆட்கள் வேண்டும். கூடுதல் நெல் பாதுகாப்பு கிடங்குகளை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது போதுமான நெல் பாதுகாப்பு கிடங்குகள் கட்டப்படவில்லை என்பதும் இந்த பிரச்சினைக்கு காரணம்.
கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் திறந்த வெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். தற்போது மேற்கூரைகள் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலத்தைவிட 5 மடங்கு கூடுதலாக நெல் விளைகிறது. மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறந்து விடப்படுவது, விவசாயிகளுக்கு 1.80 லட்சம் மின்சார இணைப்பு வசதியை கூடுதலாக கொடுத்து இருப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் விளைச்சல் அதிகமாக உள்ளது.
1,500 நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திருக்கிறோம். மூட்டைகளை நனையாமல் பாதுகாக்க, சர்க்கரை ஆலை கிடங்குகள், சிவில் சப்ளைஸ் கிடங்குகளை பயன்படுத்துகிறோம். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நெல் கொள்முதல் முழுமையாக செய்யப்பட்டு விட்டது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் கொஞ்சம் இருப்பு இருக்கிறது. அதை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கினால் 10 முதல் 15 நாட்கள் கழித்துதான் மழை பெய்ய தொடங்கும். ஆனால் முதல் நாளிலிருந்தே மழை பெய்வதன் காரணமாக சில இடங்களில் கொள்முதல் செய்யாத நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. எனவே ஒருசில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. அதுவும் தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது.
சம்பா சாகுபடிக்கான 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு நீரில் மூழ்கியுள்ளது. 33 சதவீதத்திற்கு மேல் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும். நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.