
மும்பை,
மும்பை பாலிஹில் பகுதியில் 62 வயது மூதாட்டி வசித்து வருகிறார். சமீபத்தில் பிரியா சர்மா என்ற பெண் பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக கூறி மூதாட்டியை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவர் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மூதாட்டியிடம் ஆசைவார்த்தை கூறினார். மேலும் மூதாட்டியின் செல்போன் எண்ணை வாட்ஸ்அப் குழுவிலும் சேர்த்தார்.
அந்த குழுவில் பலர் தங்களுக்கு ஆன்லைன் பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைத்ததாக கூறினர். இதை நம்பி மூதாட்டியும் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய விரும்பினார்.
இதற்காக அவர் பிரியா சர்மா கூறிய குறிப்பிட்ட செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதன் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.7 கோடியே 87 லட்சம் வரை அனுப்பி முதலீடு செய்தார். இந்தநிலையில் அவர் முதலீடு செய்த பணத்துக்கு அதிக லாபம் வந்தது போல செயலியில் காட்டியது. எனவே மூதாட்டி லாபத்தை செயலியில் இருந்து வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதையடுத்து அவர் பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரின் பெயரில் எந்த முதலீடும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?