இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்தன - பிரதமர் மோடி

இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்தன - பிரதமர் மோடி

டெல்லி,


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி வரை ஒருமாத காலம் நடைபெறுகிறது.


இந்த கூட்டத்தொடரில் காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல், காஷ்மீரில் நிலவிய பாதுகாப்பு குறைபாடு, இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து, பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்பட 8 முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன.


அதேவேளை, இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.


இந்நிலையில், நாடாளுமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,


இந்த நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டம் போன்றது. இந்திய ராணுவத்தின் வலிமையை உலகம் பார்த்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவம் நிர்ணயித்த இலக்குகள் 100 சதவீதம் வெற்றியடைந்துவிட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளின் வீடுகள் 22 நிமிடத்தில் தரைமட்டமாக்கப்பட்டன.


இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்தன. உலக நாடுகளின் தலைவர்களை நான் சந்திக்கும்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ ஆயுதங்கள் தங்கள் ஈர்ப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் ஆயுத உற்பத்தி அதிகரித்து வருகிறது.


இந்திய தேசியக்கொடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறக்கவிட்டப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. அனைத்து எம்.பி.க்களும் நாட்டு மக்களும் ஒரே குரலில் இந்த சாதனையைப் போற்றுவார்கள். நமது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இது ஊக்கமாக இருக்கும்.


நாட்டில் உள்ள நக்சலைட்டுகள் முழுவதும் ஒழிக்கப்படுவார்கள். நக்சலைட்டுகளின் எண்ணிக்கை அதிவேகமாக குறைந்து வருகிறது. நக்சலைட்டுகள் பிடியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன. நக்சலைட்டுகள் பாதிப்பு இருந்த மாவட்டங்கள் தற்போது வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றன.


உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா விரைவில் எட்டும். நாட்டில் பண வீக்கம் குறைந்து வளர்ச்சி அதிகரித்துள்ளது. உலகின் நிதிசார்ந்த தொழில்நுட்பத்தில் யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%