பட்டாபிராமில் 4 பேரை பலி வாங்கிய நாட்டு வெடி விபத்தில் 4 பேர் கைது
Oct 23 2025
19

அம்பத்தூர், அக். 21- பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாபிராம் தண்டுரை விவசாயி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவரது மனைவி செல்வி (45). இவர்களது மகள் ஹேமலதா (28). மகன்கள் விஜய் (25 ) அஜய் (23). ஆறுமுகம் மனைவி செல்வி. கடந்த 6 ஆண்டுக ளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் ஹேமலதா மகன் அஜய் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனித் தனியாக வசிக்கின்றனர். ஆறுமுகமும் மகன் விஜயும் ஒரேவீட்டில் வசிக்கிறார்கள். ஆறுமுகம் பஜார் தெருவில் பூ வியாபாரம் செய்கிறார். இவரது மகன் விஜய் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவர் திருப்பெரும்புதூர் பகுதியில் இருந்து நாட்டு வெடிகளை வாங்கி வந்து வீட்டில் வைத்து, அவற்றை பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதியில் விற்பனை செய்து வந்தார். குறிப்பாக கோவில் திருவிழாக்கள் மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு நாட்டு வெடிகளை பொது மக்கள் வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் நாட்டு வெடிகளை வாங்குவதற்காக சிலர் விஜய் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது நாட்டு வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீடு இடிந்து விழுந்தது. உடனே இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி 4 பேர் கருகி பலியாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நடத்திய காவல் துறை விசாரணையில், திருநின்றவூர் நத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான சுனில் (22), யாசின் (20 ), பொன்னேரி ஆரணி தென்னம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சுமன் (22) மற்றும் சஞ்சய் (22 ) ஆகியோர் இறந்து போனவர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பூக்கடைக்காரர் ஆறுமுகம், அவரது மகன் விஜய் மற்றும் நாட்டு வெடிகளை விற்பனை செய்த 2 உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?