பழனிசாமியை தோளில் தூக்க மாட்டார் விஜய் - டிடிவி தினகரன் திட்டவட்டம்
Oct 26 2025
11
பழனிசாமியின் தலைமையை விஜய் ஏற்றுக்கொள்வது தற்கொலைக்குச் சமம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்க தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. அமமுக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் கூட்டணி குறித்து தெரிவிப்போம். எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்றுதான் கூறினேன். விஜய் கூட்டணிக்கு செல்வோம் என்று நான் சொல்லவில்லை. அரசியலில் அனுபவத்தைவிட, மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அரசு சரியாக செயல்பட்டால் அதை வரவேற்பதும், சரியாகச் செயல்படவில்லை என்றால் எதிர்த்துக் குரல் கொடுப்பதும் எங்களது கொள்கை.
பழனிசாமியும், அவரை சேர்ந்தோரும் தமிழகத்தில் பரிதாபமான நிலையில் உள்ளனர். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்று இல்லை. இது பழனிசாமி அதிமுகவாக உள்ளது. காலில் விழுந்து பதவியைப் பெற்றுவிட்டு, காலை வாரியவர் பழனிசாமி. செய்த துரோகத்துக்காக அவர் வீழ்த்தப்படுவார். ரஜினியைப் போன்று விஜய்யும் உச்ச நட்சத்திர நடிகர். வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்குச் சேவை செய்ய வந்த அவர், தனது தலைமையில் தான் கூட்டணி அமைப்பார். கூவிக் கூவி அழைக்கும் பழனிசாமியை தோளில் தூக்கிவைத்துக் கொள்ளமாட்டார். பழனிசாமியின் தலைமையை விஜய் ஏற்றுக் கொள்வது தற்கொலைக்குச் சமம். இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?