ஆறிலும் சாவு நூறிலும் சாவு
நாம் அறிந்த விளக்கம் :
மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.
விளக்கம் :
இந்த பழமொழிக்கான சம்பவம் மஹாபாரதத்திலிருந்து உதாரணம் காட்டப்படுகிறது. கர்ணணை குந்தி தேவி (போர் நிகழும்போது) தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள். அதற்கு கர்ணன் தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன் இருந்தாலும் சரி அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப்போகிறேன் என்கிறான் கர்ணன். இதுவே இதன் விளக்கம் ஆகும்.
Thanks and regards
A s Govinda rajan
அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது
நாம் அறிந்த விளக்கம் :
ஊருக்கு ஊர் இனத்துக்கு இனம் வௌ;வேறு வார்த்தைகளால் பிணைத்து பயன்படுத்தப்படுகிறது. அதிகம் படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது என்பார்கள். இன்னும் சில இடங்களில் எல்லாம் தெரிஞ்சவர்தான் கழனிப் பானைக்குள்ளே கைய விட்டாராம் என்பார்கள். ஆக இதெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றுதான் ஆர்வகோளாறில் தெரியாத ஒன்றை செய்யப் போக அது வேறுவிதமான முடிவைத் தரும் என்பதே. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.
விளக்கம் :
இந்த பழமொழி இந்த விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அதாவது அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது என்பதுதான் சரியான பழமொழி. வட்டார வழக்கில் மருவி அது மேற்கண்டவாறு திரிந்தது. அதன் பொருள் ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் ஒரு சில பருக்கைககள் கஞ்சிக்குள் விழவே செய்யும். ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் விழுகின்றன. இதனை குறிக்கும் பழமொழி அறவடிச்ச என்பது அறப்படிச்ச என்றாகி முன் சோறு- மூஞ்சூறு ஆகிவிட்டது.
Thanks and regards
A s Govinda rajan
உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு
நாம் அறிந்த விளக்கம் :
மிக அழகான பெண்கள் பக்கம் திருப்பி விடப்பட்ட பழமொழிகளில் இதுவும் ஒன்று. உணவு நிறைய சாப்பிட்டால் பெண்கள் உடல் பெருத்து அழகற்றவர்களாகி விடுவார்கள் என்று பயந்தோ என்னவோ பழமொழியையே மாற்றி விட்டார்கள். இந்தப் பழமொழியின் உண்மையான வடிவமும் சொல்லப்படும் நீதியும் ஆண்களுக்குத் தான் என அறியும்போது இதில் உள்ள அறிவியல் தத்துவமும் ஆச்சரியத்தை தருகிறது.
விளக்கம் :
இந்த பழமொழியின் உண்மையான வடிவம் உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு என வந்திருக்க வேண்டும். பண்டி என்பது பெண்டீர் என மறுகி பெண்களுக்கு நல்லது என அறிவுறுத்தலாய் வந்துவிட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை குடல் இறக்க நோய் ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள். ஆக உண்டி சுருக்க பொதுவாய் சொல்லித் தரப்பட்ட பழமொழி பெண்களுக்கு மட்டும் என்றாகி விட்டது.
Thanks and regards
A s Govinda rajan
அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் நாம் அறிந்த விளக்கம் :
வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்க கூடும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அவ்விதமே இன்று வரை விளக்கப்பட்டு கொண்டிருக்கிற பழமொழி இது. ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.
விளக்கம் :
இந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும்போது, எல்லாம் அவனே என இறைவனை நினைத்துக் கொண்டோர்க்கு எவ்வித துன்பமுமில்லை. அந்த இறைவனின் அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது என்பதை குறிக்கும் விதமாகவே சொல்லப்பட்ட பழமொழி இது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
Thanks and regards
A s Govinda rajan
அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்
நாம் அறிந்த விளக்கம் :
அரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும் திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது. நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான். ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.
விளக்கம் :
அரப்படிச்சவன் என்பது வழக்கு மொழியில் மாறிப்போன வார்த்தையாகி விட்டது. அந்தப் பழமொழியின் சரியான வாக்கியம் அறம் படித்தவன் என்றிருக்க வேண்டும். அதாவது இலக்கிய நூல்கள் அல்லது வேதங்கள் சொல்லும் அறங்களை முழுமையாக கற்றவன் எல்லா வணிகமும் ஒழுங்காக செய்திட முடியாது. சில வியாபாரத்துக்கு சில நெளிவு சுளிவுகள் அறத்தைப் பொறுத்தவரை தவறாகப்படும். அதிகம் படித்த மேதாவி படித்து முடித்த பின் வணிகம் செய்ய நினைத்தான். அவன் சென்ற இடமோ தூத்துக்குடி. அங்கே மீன் வணிகம் செய்தால் பிழைக்கலாம். மீனைப் பிடிப்பதும் வெட்டுவதும் பாவம் என நினைத்தான். மீன் வியாபாரம் செய்யவில்லை. முத்து விற்க நினைத்தான். சிப்பிகளை கொன்றல்லவா முத்து எடுக்க வேண்டும். முத்து வியாபாரமும் செய்யவில்லை. உப்பு விற்கலாம் என்று நினைத்தான். உப்பளம் சென்று பார்க்கையில் ஆண்களும் பெண்களும் வெயிலில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் யாரையும் வருத்திப் பொருள் சேர்த்தல் பாவம் என்று ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இப்படியாக எண்ணும் மேதாவிகளுக்கு சொல்லப்பட்ட பழமொழியே இது.
Thanks and regards
A s Govinda rajan
பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ
நாம் அறிந்த விளக்கம் :
விருந்து நடக்கும் இடங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும், போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும் என நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக உலக வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது.
விளக்கம் :
இந்த பழமொழியின் உண்மையான வடிவம் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்பதாகும். இந்தப் பழமொழியை சாதாரணமாக உட்பொருள் கொண்டால் பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும். போர்க்களத்தில் வேலோ, வாளோ, வில்லுக்கோ கை பிந்தும். எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் படை முந்தும். இதல்லாது இன்னொரு பொருளையும் இதனூடே சொல்வார்கள். அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடி வைக்கையில் நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியமே இந்த பழமொழி. வில் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில் அம்பு வைத்து நான் இழுக்க கை பின்னே போகும். அதே கை உணவருந்தையில் முன்னே போகும். இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுத்தப்பட்டது.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai
600024