பால்கனிப் பறவை"

பால்கனிப் பறவை"


வழக்கம் போல் நண்பகல் 12.00 மணிக்கு மொட்டை மாடிக்கு வந்தனர் பெருமாளும், சாந்தாவும்.


அவர்களது ஒரே மகன் துரை மூன்று வருடக் காண்ட்ராக்டில் துபாய்க்கு சென்றவன் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை ஒரு தடவை கூடத் தன் பெற்றோர்களை பார்க்க வரவே இல்லை.


சில சமயங்களில் வேலைப் பளு காரணமாகவும், பல சமயங்களில் விருப்பமின்மை காரணமாகவும், அவன் தாய் மண்ணை தொடவே இல்லை.


  "என்ன...?... இன்னும் ஆறு மாசம்தானே?... காண்ட்ராக்ட் முடிந்து விடும்... அப்புறம் ஒரேயடியாய்ச் சொந்த நாட்டுக்கே.. சொந்த ஊருக்கே போய் செட்டிலாகி விடலாம்!" என்ற எண்ணத்தில் அவன் அங்கு இருப்பது பாவம் வயதான பெற்றோர்களுக்கு எப்படி தெரியும்?.


  "ஏங்க நமது துரை... என்னோட சமையலை எப்படி ரசிச்சு ரசிச்சு சாப்பிடுவான் தெரியுமா?... பாவம் அங்கே என்ன கர்மத்தை சாப்பிடறானோ?" அவள் வெளிநாடு சென்ற பின் இதைத் தினமும் தன் கணவரிடம் சொல்லிச் சொல்லி அழுவாள் சாந்தா.


   ஒருமுறை எதேச்சையாக மொட்டை மாடிக்கு வந்த சாந்தா அங்கே ஒரே ஒரு காகம் மட்டும் சோகமாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து, உடனே சமையலறைக்குச் சென்று சாப்பாட்டை எடுத்து வந்து அந்த காகத்திற்கு பரிமாறினாள்.


ஒரு நாள், இரண்டு நாளல்ல... மாதக்கணக்கில் அவள் அவ்வாறு செய்யப் போக அந்தக் காகம் தினமும் சரியாக பகல் 12 மணிக்கு அவர்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்து விடும்.


  "என்ன சாந்தா... அந்தக் காக்கை உனக்கு ஃபிரண்ட் ஆயிடுச்சு போலிருக்கு!" பெருமாள் கேட்க.


  "ஃப்ரண்ட் இல்லைங்க... அந்தக் காக்கை என் பிள்ளை.... என் மகனுக்குத்தான் என் கையால் சமைத்துப் போட எனக்கு கொடுத்து வைக்கலை அதான் இந்த காக்கைக்கு போட்டு அது சாப்பிடறதை பார்த்துச் சந்தோஷப்படறேன்" என்றாள் சோகம் இழையோடிய வார்த்தைகளில்.


  "ஏதோ அந்த அளவிலாவது அவள் தன் மனதைத் தேடற்றிக் கொள்கிறாளே?... என்பதில் மகிழ்ந்து, " சரி சாந்தா...உனக்கு எது சந்தோஷமோ அதை தாராளமாய்ச் செய்யும்மா" என்று அவளை ஊக்கப்படுத்தினார் பெருமாள்.


அன்று மதியம் 11:50-க்கே சாப்பாட்டுத் தட்டுடன் மொட்டை மாடிக்கு வந்து காத்திருந்த சாந்தாவைச் சோகப்படுத்துவது போல் 12 மணிக்கு மேலாகியும் அந்த காகம் வரவில்லை.


  "ஏன்?... என்னாச்சு?... சரியா 12 மணிக்கு "டாண்"னு ஆஜராயிடுவானே?... இன்னைக்கு ஏன் லேட் பண்றான்?


பனிரெண்டேகால், பன்னிரண்டரை, ஒரு மணி, ஒன்றரை மணி, என்று நேரம் ஓடிக் கொண்டே இருந்ததே காகம் வரவேயில்லை.


நொந்து போன மனதுடன் மாடிப்படிகளில் இறங்கி வந்து, ஹாலில் தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்த தன் கணவனிடம் தன் கவலையைச் சொன்னாள் சாந்தா.


 தொலைக்காட்சி செய்தியையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பெருமாள், அவளைக் கையமர்த்தி விட்டு தொலைக்காட்சியைக் காட்டினார். 


  "துபாயில் 48 மாடிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த மூவர் இறந்துள்ளனர்"


தொலைக்காட்சி திரையில் அந்த மூவரின் புகைப்படங்களும் காட்டப்பட, இரண்டாவதாக இருந்த புகைப்படத்தில் துரை சிரித்துக் கொண்டிருந்தான்.


 "தடார்" என்ற சத்தம் கேட்டு தன் பார்வையை தொலைக்காட்சி திரையிலிருந்து விலக்கிய பெருமாள் கண்டது, தரையில் மயங்கிக் கிடந்த தன் மனைவி சாந்தாவை.


 (முற்றும்)


முகில் தினகரன் 

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%