பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை: பெற்றோர் உள்பட 4 பேர் கைது

பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை: பெற்றோர் உள்பட 4 பேர் கைது

சேலம், ஆக. 24–


பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பெற்றோர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் ராமாபுரம் ஆஞ்சநேயர் கோவில் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்-சிவகாமி. இந்த தம்பதிக்கு கடந்த 9-ந் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை சந்தோஷ் மற்றும் அவருடைய மனைவி சிவகாமி ஆகியோர் தேவராஜ் என்பவரது உதவியுடன் ரஞ்சித் என்பவருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.


இதனிடையே சந்தோஷ், சிவகாமி ஆகியோர் கடந்த 14-ந் தேதி ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக போலி மருத்துவ அறிக்கை வைத்து இருந்தனர். இதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை விற்பனை செய்தது குறித்து சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் உதவி மைய பணியாளர் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மகுடஞ்சாவடி போலீசார் கடந்த 20-ந்தேதி சந்தோஷ் வீட்டுக்கு நேரில் சென்றனர். அப்போது அவர்களது வீடு பூட்டி இருந்தது. இதனால் போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தம்பதிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததும், அதை விற்பனை செய்து விட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் பெண் குழந்தையை விற்பனை செய்த சந்தோஷ், சிவகாமி, தேவராஜ், ரஞ்சித் ஆகிய 4 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%