பிஹாரை சேர்ந்த 4 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு: டெல்லி போலீஸார் உதவியுடன் நடவடிக்கை
Oct 25 2025
20
புதுடெல்லி: பிஹாரில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த 4 பேர் டெல்லியில் நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சிக்மா என்ற ரவுடி கும்பல் செயல்பட்டு வந்தது. இந்த கும்பலில் உள்ள ரஞ்சன் பதக், பிம்லேஷ் மஹ்தோ, மனீஷ் பதக், அமன் தாகூர் ஆகியோர் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள். பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இவர்கள், பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இவர்களை பிஹார் போலீஸார் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் டெல்லி உள்ள ரோஹினி பகுதியில் பகதூர் ஷா மார்க் என்ற இடத்தில் இந்த கும்பல் பதுங்கியிருப்பதாக பிஹார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இவர்களை பிடிக்க டெல்லி போலீஸாரின் உதவியை பிஹார் போலீஸார் நாடினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2.20 மணியளவில் பகதூர் ஷா மார்க் பகுதியில் சிக்மா கும்பலை சேர்ந்த ரவுடிகள் பதுங்கியிருந்த இடத்தை டெல்லி மற்றும் பிஹார் போலீஸார் சுற்றி வளைத்தனர்.
அப்போது சிக்மா கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் சிக்மா கும்பலைச் சேர்ந்த 4 பேரும் சுடப்பட்டனர். படுகாயம் அடைந்த இவர்களை போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மிகப் பெரிய என்கவுன்ட்டர் ஆகும். உயிரிழந்த குற்றவாளிகள் குறித்து பிஹார் போலீஸார் கூறுகையில், ”பிஹாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும், சிக்மா கும்பல் ஒருவரை கொலை செய்தனர். இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்ட ரஞ்சன் பதக் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.25,000 பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கும்பல் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு டெல்லிக்கு தப்பிச் சென்றனர். அவர்களை சுற்றி வளைத்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பதில் தாக்குதல் நடத்தினோம்” என்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?