உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதல்: 3 பேர் உடல் நசுங்கி பலி

உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதல்: 3 பேர் உடல் நசுங்கி பலி



கள்ளக்குறிச்சி, அக். 24–


உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் பலியானார்கள்.


சேலம் மாவட்டம் சூரியகவுண்டர் காடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் சந்தோஷ் (வயது 25) இவர் தனது நண்பரான சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி மகன் சூர்யா (24) மற்றும் சந்தோஷின் பெரியம்மாவான கடலூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி ஆகிய 3 பேரும் கடலூரிலிருந்து சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சந்தோஷ் ஓட்டிச் சென்றார்.


இந்த நிலையில் அந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியன்மாதேவி கிராமத்தில் உளுந்தூர்பேட்டை – சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் காரில் பயணம் செய்த சந்தோஷ், நண்பர் சூர்யா மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து லாரி ஓட்டுனரான தஞ்சாவூர் பாரனேரியை சேர்ந்த ராஜதுரை என்பவரை கைது செய்த போலீசார் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அவரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் இந்த விபத்து காரணமாக உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%