இரிடியத்தில் முதலீடு எனக் கூறி ரூ.1.30 கோடி மோசடி: அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் கைது

இரிடியத்தில் முதலீடு எனக் கூறி ரூ.1.30 கோடி மோசடி: அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் கைது



கைது செய்யப்பட்ட பட்டு ராஜன்

விருதுநகர்: விருதுநகரில் இரிடியத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகக் கூறி ரூ.1.30 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி உள்பட 3 பேரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டைச் சேர்ந்தவர் பழனிசெல்வம் (46). இவரிடம் ராஜபாளைம் அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரும், சேத்தூர் பேரூராட்சி 8வது வார்டு அதிமுக செயலாளருமான பட்டு ராஜன் (52) மற்றும் அப்பகுதியில் பல்வேறு பெயர்களில் அறக்கட்டளை நடத்தி வந்த ராணி நாச்சியார் (53), கந்தநிலா (55) உள்ளிட்டோர் இரிடியத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகவும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.


இதை நம்பி, பழனிசெல்வமும் கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் செலுத்தியுள்ளார். பின்னர், தனக்கு தெரிந்த நபர்களிடம் கூறி அவர்கள் மூலமாகவும் ரூ.1.30 கோடி செலுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் கூறியதுபோல் பணத்தை திரும்பிக் கொடுக்கவில்லை. விசாரித்தபோது, பல பெயர்களில் அறக்கட்டளை நடத்தி அதன் மூலம் பணம் வசூல் செய்ததும், மத்திய ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்ததும் தெரிய வந்தது.


இதுகுறித்து விருதுநகரில் உள்ள சிபிசிஐடி போலீசில் பழனிசெல்வம் புகார் அளித்தார். இதுகுறித்து, இஸ்பெக்டர் சாவித்திரி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இரிடியம் மோசடியில் பலரிடம் ரூ.1.30 கோடி வரை மோசடி செய்யப் பட்டது தெரியவந்தது.


இது தொடர்பாக, ராணி நாச்சியார், கந்த லீலா, ரமேஷ் கண்ணன், நாக வள்ளி, ராஜ்குமார், பிரவேஷ் குமார், முத்து, மகேந்திரன், பட்டுராஜன், சூரியா ஆகிய 10 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இவர்களில் பட்டுராஜன், ராணி நாச்சியார், கந்த நிலா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட மூவரிடமும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற 7 பேரையும் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%