புதுச்சேரி வியாபாரிகளுக்கு அரசு முக்கிய அறிவிப்பு... நீங்க இதை செய்யலைன்னா அபராதம் கட்டணுமாம்..
புதுச்சேரி மாநிலத்தில் தொழில் நிறுவனங்கள், பல்பொருள் சிறப்பு அங்காடிகள், பேக்கரி, சிறிய-பெரிய மளிகை மற்றும் காய்கறி கடைகளின் உரிமையாளர்கள் எடை மற்றும் அளவு எந்திரங்களை புதுச்சேரி சட்டமுறை எடையளவு விதிகள் 2011-ன் கீழ் முறையாக பராமரித்து ஆண்டுக்கு ஒருமுறை அரசாங்க முத்திரையிட்டு சான்றிதழ் பெற வேண்டும்.எனினும் புதுவையில் உள்ள நிறுவனங்கள், கடைகள், அங்காடிகள் தாங்களின் எடை மற்றும் அளவு எந்திரங்களுக்கு முறையான சான்றிதழ் பெறாமல் அல்லது புதுப்பிக்காமல் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. இது அபராதம் விதிப்பதற்குரிய குற்றமாகும்.
இது தொடர்பாக சட்டமுறை எடையளவு அதிகாரிகளால் கீழ்கண்ட அட்டவணைகளின்படி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வின் போது சான்றிதழ் பெறாமல், புதுப்பிக்காமல் உள்ள எடை மற்றும் அளவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும் அல்லது அந்த எந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும்.எனவே வியாபாரிகள் தங்களது எடையளவை எந்திரங்களை சட்டமுறை எடையளவு அலுவலகத்தில் சரிபார்த்து உரிய சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.
வருகிற 30-ந்தேதி கிருமாம்பாக்கம், முள்ளோடை, பாகூரிலும், 31-ந்தேதி நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம், மடுகரையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஆகஸ்டு 1-ந்தேதி மதகடிப்பட்டு, திருக்கனூர், 4-ந்தேதி திருபுவனை, திருவண்டார்கோவில், அரியூர், பங்கூர், 5-ந் தேதி பத்துக்கண்ணு, சேதராப்பட்டு, 6-ந்தேதி லிங்காரெட்டிபாளையம், சுத்துக்கேணி, காட்டேரிக்குப்பத்திலும் நடக்கிறது.
புதுவை - வழுதாவூர் சாலையில் 7, 8 மற்றும் 19, 20-ந் தேதிகளிலும், காமராஜர் சாலையில் 11, 12, 21, 22 ஆகிய தேதிகளிலும், கருவடிக்குப்பம் முதல் ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் வரை 13-ந்தேதியும், லாஸ்பேட்டையில் 14-ந் தேதியும், கனகசெட்டிகுளம் முதல் பிள்ளைச்சாவடி வரை 18-ந் தேதியும், காந்திவீதியில் முத்தியால்பேட்டை முதல் அஜந்தா சந்திப்பு வரை 19-ந் தேதியும் நடக்கிறது.
முதலியார்பேட்டை முதல் முருங்கப்பாக்கம் வரை 20-ந் தேதியும், முருங்கப்பாக்கம் முதல் வில்லியனூர் வரை 21-ந்தேதியும், அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை 22-ந்தேதியும், வில்லியனூரில் 25-ந்தேதியும் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குகின்றனர் என புதுச்சேரி சட்டமுறை எடையளவு அலுவலக கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.