பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: 4 மணி நேரத்தில் குற்றவாளி கைது
Jul 31 2025
21

சென்னை:
பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற இளைஞரை ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே போலீஸார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.
சென்னை கோட்டூர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ரோஸி (41). இவர் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளிப் பணியை முடித்துவிட்டு, வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் அருகில் வந்து அமர்ந்து, பேச முயன்றுள்ளார். அவரிடம் பேச மறுத்து, மற்றொரு இருக்கையில் அந்தோணி ரோஸி அமர்ந்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் ரோஸி அருகில் சென்ற மர்ம நபர், ரோஸி கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, அது அறுபட்டு ஒரு சவரன் நகை அந்த மர்ம நபரின் கைக்குச் சென்றுள்ளது. அதனை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உடனடியாக, இச்சம்பவம் தொடர்பாக மயிலாப்பூரில் உள்ள ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ஆர்.பி.எஃப் போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் விரைந்து வந்து, விசாரணையைத் தொடங்கினர். மேலும், இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளியைத் தேடினர்.
இதனிடையே, நகைப் பறிப்பில் ஈடுபட்டு திருவல்லிக்கேணியில் பதுங்கி இருந்த நபரை ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே போலீஸார் இணைந்து சுற்றி வளைத்து பிடித்தது. பின்னர், அவரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது, விழுப்புரம் செங்கம் மேல்பம்பாடி பகுதியைச் சேர்ந்த பாபுஜி (26) என்பதும், ஏற்கெனவே இவர் மீது ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக பாபுஜியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?