மகளிர் உலகக் கோப்பை செஸ்: இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்
Jul 31 2025
139

பதுமி:
ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனையான திவ்யா தேஷ்முக், சகநாட்டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்டரான கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
ஜார்ஜியா நாட்டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 38 வயதான கோனேரு ஹம்பி, சகநாட்டைச் சேர்ந்த 19 வயதான சர்வதேச மாஸ்டரான திவ்யா தேஷ்முக்குடன் மோதினார். இரண்டு கிளாசிக்கல் ஆட்டமும் டிராவில் முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கான டைபிரேக்கர் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் முதல் ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் திவ்யா தேஷ்முக் விளையாடினார். இந்த ஆட்டமும் டிரா ஆனது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் விளையாடிய திவ்யா தேஷ்முக், 2 முறை உலக ரேப்பிடு சாம்பியனான கோனேரு ஹம்பியை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள அதே நேரத்தில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றுள்ளார் நாக்பூரை சேர்ந்த திவ்யா தேஷ்முக். இந்திய வீராங்கனைகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் 4-வது நபர் திவ்யா தேஷ்முக் ஆவார். இதற்கு முன்னர் கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி, ஆர்.வைஷாலி ஆகியோரும் கிராண்ட் மாஸ்டராகி இருந்தனர். உலக அளவில் 88-வது மகளிர் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் திவ்யா தேஷ் முக் பெற்றுள்ளார்.
உலக சாம்பியனான திவ்யா தேஷ்முக்கும், 2-வது இடம் பிடித்த கோனேரு ஹம்பியும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். 8 பேர் கலந்து கொள்ளும் கேண்டிடேட்ஸ் தொடரில், உலக மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் வென்ஜுன் ஜூவுக்கு எதிராக போட்டியிடுபவர் தேர்வு செய்யப்படுவார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?