போதை பொருள் விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்: விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு
சென்னை: போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் கடந்தமே மாதம் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, அதிமுக நிர்வாகி பிரசாத், நாகேந்திர சேதுபதி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
பிரசாத்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சினிமா நடிகர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்பேரில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் (எ) பிரிட்டோ), மேற்கு ஆப்பரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆகியோரை ஜூன் 17-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை ஜூன் 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். மேலும், ‘கழுகு’ திரைப்பட நடிகர் கிருஷ்ணா என்ற கிருஷ்ணகுமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், அவர் மேலும் சிலருக்கு கைமாற்றியதாகவும் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, அவரையும், சப்ளையர் கெவினையும் ஜூன்.27-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் 22-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து பல்வேறு வகையிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் வெளிநாட்டு கும்பலுடன் பலருக்கு தொடர்பு இருப்பதால், இதில் பல லட்சம் ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிடோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.