போர் நிறுத்தத்திற்கு கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் நிபந்தனையின்றி ஒப்புதல்
கோலாலம்பூர்,
தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு தீவிரமடைந்தது. இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதி கொண்டனர்.
அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளின் இடையேயும் விரிசல் அதிகரித்தது. பதற்றம் பரவியது. இந்த சூழலை தேசியவாதிகள் பெரிதுபடுத்தினர். இதனால், பதற்றம் இன்னும் அதிகரித்தது. இந்நிலையில், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் மோதி கொண்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. கம்போடிய ராணுவம் நீண்டதூர ராக்கெட்டுகளை கொண்டு பொதுமக்கள் மீது தாக்கியது என தாய்லாந்து குற்றச்சாட்டாக தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் குடிமக்களில் 9 பேர் பலியானார்கள் என முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் இரு தரப்பிலும் சேர்த்து, பலி எண்ணிக்கை மொத்தம் 32 ஆக உயர்ந்தது.
இதுபற்றி கம்போடிய தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாலி சொசீட்டா கூறும்போது, குடிமக்களில் 7 பேர் மற்றும் வீரர்களில் 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது என கூறினார். இதுதவிர, பொதுமக்களில் 50 பேர் மற்றும் வீரர்களில் 20 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதேபோன்று கம்போடியாவின் தாக்குதல்களில், தாய்லாந்தின் 29 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 30 பேர் காயமடைந்து உள்ளனர். தாய்லாந்துடனான வடக்கு எல்லையில் இருந்து 20 ஆயிரம் கம்போடிய மக்கள் புலம்பெயர்ந்து சென்றனர். தாய்லாந்தின் எல்லை பகுதிகளில் இருந்தும் 1.38 லட்சம் பேர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இரு நாடுகளின் மோதல் போக்கை அடுத்து தாய்லாந்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அதேபோல் தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பவும் கம்போடியாவில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக கம்போடியா உடனான எல்லையை தாய்லாந்து மூடியது. இதில் மாணவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்தது.
இதற்கு தீர்வு காண இருதரப்பு தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இரு நாடுகளின் தூதர்களும் முறையே அந்தந்த நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தாய்லாந்து சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே சுமுக உடன்பாடு ஏற்படுவதற்காக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். மலேசியாவில் இருந்து, இரு நாடுகளுக்கான மத்தியஸ்தம் செய்யும் பேச்சுவார்த்தையில் அன்வர் ஈடுபட்டார். அப்போது, கம்போடிய பிரதமர் ஹன் மானெட் மற்றும் தாய்லாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பு வகிக்கும் பும்தம் வெசயாசாய் ஆகியோர் உடனிருந்தனர்.
இதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அன்வர் வெளியிட்டுள்ள செய்தியில், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் பொதுவான புரிதலுக்கு வந்தனர். இதன்படி, உடனடி மற்றும் நிபந்தனையின்றி போர்நிறுத்தத்திற்கு அவை ஒப்புதல் அளித்துள்ளன. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என கூறினார்.