மகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்து - பாகிஸ்தான் ஆட்டம் பாதியில் ரத்து
Oct 17 2025
18

கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் கொழும்பில் நேற்று அரங்கேறிய 16-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்டர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விழிபிதுங்கினர். அமே ஜோன்ஸ் (8 ரன்), டாமி பீமோன்ட் (4 ரன்), கேப்டன் நாட் சிவெர் (4 ரன்) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 25 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 75 ரன்களுடன் பரிதவித்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சார்லி டீன் 33 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பாத்திமா சனா 6 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 27 ரன் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை அள்ளினார். பெண்கள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.
பின்னர் டக்வொர்த்- லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் 113 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. நம்பிக்கையுடன் தொடங்கிய பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. தொடர்ந்து மழை கொட்டியதால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 3-வது ஆட்டம் இதுவாகும். இந்த மூன்று ஆட்டங்களும் இதே மைதானத்தில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?