மகேஷ்--சுவரி

மகேஷ்--சுவரி



எதையோ மறைக்கிறான் என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. படிக்க உட்காருவதில்லை. சரியாக சாப்பிடவில்லை. உர்ர்ரென்ற ஒரு முக பாவனை.


சகுந்தலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா இல்லாத மூன்று குழந்தைகளுக்கும் அப்பாவும் அம்மாவும் இவர்தான். குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். படித்து நல்ல வேலையில் அமரவேண்டும். இது சகுந்தலாவின் கனவாக இருந்தது. நனவாக மாற கடுமையாக உழைத்தார்.


"ஏம்ப்பா, என்னாச்சு? எதையாச்சும் எங்கிட்ட மறைக்கிறியா? சொல்லுப்பா அம்மாகிட்ட, பாத்துக்கலாம்" என்று மகன் மகேஷிடம் கேட்டார்.


"இல்லம்மா ஒன்னுமில்ல", என்று வாய் சொன்னாலும் கண்கள் கண்ணீரைக் கொட்டியது.


பயந்து போன அம்மாவிடம் தன் நிலைமையை எப்படி எடுத்துச் சொல்வது? எப்படி எடுத்துக் கொள்வார்? அதன் பிறகு தன் நிலைமை? யோசித்து யோசித்து மண்டைக்குள் ஆயிரம் குளவிகள் கொட்டுவது போல் உணர்ந்தான் மகேஷ்.


வாசவிக்கு அண்ணன் எதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டும்? எதை மறைக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள ஆசை.


மகேஷ் பிளஸ் டூவும், வாசவி டென்த்தும் படிக்கிறார்கள்.


"அண்ணா எனக்கு கொஞ்சம் மேத்ஸ் சொல்லிக் குடுங்க" என்றவாறே நோட்டுப் புத்தகம் சகிதம் உள்ளே சென்றாள்.


பெரிதாக எதுவும் பதில் சொல்லவில்லை. உள்ளே சென்று கதவை ஒருக்களித்தாள்.


"அண்ணா என்னாச்சு? எங்கிட்ட சொல்லு ப்ளீஸ்" என்றாள் வாசவி.


அவள் கையைப் பிடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தான். "வாசவி, எனக்கு எனக்கு, நா வந்து, நா வந்து...." மறுபடியும் அழ ஆரம்பித்தான். அவன், தான் பெண்ணாக மாறி வருவதைச் சொல்லிக் குலுங்கி அழுதான். சகுந்தலாத் துடித்துப் போனாள்.


சகுந்தலா ஷாக் ஆனாள். மகனைக் கட்டிக் கொண்டு ஆறுதல் சொன்னாள்.

அம்மாவின் அணைப்பு அவனுக்கு எத்தனையோ சொன்னது.


இதோ ஒரு முடிவெடுத்து தெருவில் இரண்டு பேர், அசோசியேஷன் தலைவர், மெம்பர்கள் இரண்டு பேர், தான் வேலை பார்க்கும் அலுவலக மேலாளர், மகேஷ் பள்ளி ஆசிரியர் இருவர் என்று எல்லோரையும் அழைத்திருந்தாள் சகுந்தலா.


டீ, பிஸ்கட் கொடுத்துவிட்டு மெல்லக் கண்களைத் துடைத்தவாறு பேச ஆரம்பித்தாள்.


"நான் சொல்லப்போற விஷயம் தற்போது நாட்டில் பல இடத்திலேயும் நடக்கறதுதான். இப்ப எங்க வீட்லயும்" குலுங்கி அழ ஆரம்பித்தாள்.


அறையின் உள்ளே மகேஷும் கதறி அழுதான். வாசவி மெல்ல ஹாலுக்கு வந்தாள். அம்மாவை அணைத்தவாறு,


"நான் சொல்றேன். எங்கண்ணனுக்கு ..... எங்கண்ணன் கொஞ்சம் கொஞ்சமா ஒரு பெண்ணாக மாறிட்டு வராரு. அதனால அவரை நாங்க வெறுக்கவோ, வீட்டை விட்டு அனுப்பவோ போறதில்ல" வாசவி ஆரம்பித்தாள்.


வந்தவர்கள் முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது. தலைவரும், ஆசிரியரும் ஏதோ சொல்ல வந்தனர்.


"நான் சொல்லி முடிச்சிடறேன். இந்த மாதிரி விஷயம் கொஞ்ச காலத்திற்கு முன்னே நமக்குப் புலப்படாத ஒன்னா இருந்தது. ஆனா இப்ப மீடியா மூலமா நிறைய தெரிஞ்சுக்கறோம். நான் அவனுக்கு மருத்துவ ரீதியா என்ன செய்யனுமோ அதை செஞ்சுட்டு, எனது இரண்டு பெண்களுடன் மூன்றாவது பெண்ணாக வச்சுக்கப் போறேன்".


"இல்லமா, வந்து ஊர்ல, எதாச்சும்..." தலைவர் தயங்கினார். "இல்ல சார், சொந்த வீட்டை விட்டுட்டு, அப்பா இல்லாதப் புள்ளங்களைக் கூட்டிட்டு எங்கயும் போக முடியாது".


"நீங்கள்ளாம் சப்போர்ட்டா இருப்பீங்கன்னு நம்பறேன்" என்று கை கூப்பினாள்.


மெல்ல ஒவ்வொருவராகக் கிளம்பினார்கள். வெளியில் சென்று ஏதோ பேசிக்கொண்டார்கள்.


வகுப்பில் ஓரிரு மாணவிகளின் ஒத்துழைப்போடு ஓரமாக பெஞ்சியில் உட்கார்ந்து பன்னிரண்டாம் வகுப்பின் கடைசி இரண்டு மாதங்கள் படித்து பரீட்சை எழுதிவிட்டாள்.


பள்ளி முதல் மாணவியாக வந்து மீடியாக்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாக பதில் சொன்னாள் மகேசுவரி.


அரசாங்க உதவியுடன் மேற்படிப்பிலும் சேர்ந்து விட்டாள்.

குடும்பத்தாரின் அன்பு, பாசம், ஒத்துழைப்பு எதுவும் குறையாமல், கிட்டத்தட்ட வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்தாள் மகேசுவரி. சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் படித்தாள்.


சமுதாயத்தில் எத்தனையோ அநீதிகள் நடப்பதைத் தட்டிக்கேட்போம். மகேசுவரியைப் போன்றோரை இழிவு படுத்தாமல் தோள் கொடுப்போம்.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%