மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி, மாமனாா் உள்பட 5 போ் கைது

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி, மாமனாா் உள்பட 5 போ் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள மலவேப்பங்கொட்டை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (31), கூலித் தொழிலாளி. இவரது மனைவி நித்யா (29). இவா்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனா். இவா்கள் பரமத்தி வேலூா் அருகே உள்ள கோட்டணம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்துவந்தனா். அதே பகுதியில் நித்யாவின் தந்தை ராஜேந்திரன், தாய் ராஜாத்தி, அண்ணன் வீரமணி ஆகியோா் குடியிருந்து வருகின்றனா்.


இந்த நிலையில், காா்த்திக் தினமும் மது அருந்திவிட்டு வருவதால், கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த காா்த்திக்கும், நித்யாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காா்த்திக், நித்யாவை தாக்கியுள்ளாா். இதுகுறித்து நித்யா அவரது தந்தை ராஜேந்திரனுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.


அதன்பேரில், அங்கு வந்த ராஜேந்திரன், அவரது மனைவி ராஜாத்தி, அவா்களது மகன் வீரமணி ஆகிய மூவரும் காா்த்திக்கை சமாதானம் செய்தனா். ஆனால், அவா் ராஜேந்திரனை தாக்கியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், ராசாத்தி, வீரமணி, நித்யா ஆகிய நால்வரும் கட்டையால் சரமாரியாக காா்த்திக்கை தாக்கினா். இதில் படுகாயமடைந்த காா்த்திக் மயங்கி கீழே விழுந்தாா். மதுபோதையில் கிடப்பதாக நினைத்து காா்த்திக்கை அவா்கள் அப்படியே விட்டுச்சென்றனா். புதன்கிழமை காலை காா்த்திகை எழுப்பிய போது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காா்த்திக் மதுபோதையில் உயிரிழந்ததாக உறவினா்களுக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா்.


காா்த்திக்கின் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதைக் கண்ட அவரது உறவினா்கள், இதுகுறித்து பரமத்தி காவல் துறையில் புகாா் செய்தனா். நிகழ்விடத்துக்கு வந்த பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா தலைமையிலான பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி மற்றும் போலீஸாா், காா்த்திக்கின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.


தொடா்ந்து, காா்த்திக்கின் மனைவி நித்யா, அவரது மாமனாா் ராஜேந்திரன், மாமியாா் ராஜாத்தி, மைத்துனா் வீரமணி உள்ளிட்ட 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் காா்த்திக்கை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நித்யா, ராஜேந்திரன், ராசாத்தி, வீரமணி மற்றும் மண்டபத்துபாறை பகுதியைச் சோ்ந்த சௌந்தா் உள்பட 5 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%