மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை

மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்    பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை


தஞ்சாவூர், அக். 21- மயிலாடுதுறையிலிருந்து, பட்டுக்கோட்டை - பேராவூரணி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, சங்கத்தின் தலைவர் வ. விவேகானந்தம், துணைத் தலைவர் வே. ராமலிங்கம், செயலாளர் கு. முகேஷ் துணைச் செயலாளர், ப. ஆத்மநாதன், பொருளாளர் ஈகா.வைத்தியநாதன் ஆகியோர், மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியத் தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி மற்றும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- “மதுரை, தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சியாகும். தொன்மையான நகரமாகும். இரவு முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கி வருவதால் தூங்கா நகரம் என்றும் பெயர் பெற்றது. அதுபோல காரைக்குடி மாநகராட்சியில் பல்கலைக்கழகம், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், ஆலயங்கள், நவீன அரிசி ஆலைகள் ஆகியவை அமைந்துள்ளன. சிறந்த தொழில் நகரமாகவும் விளங்கி வருகிறது. மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கும், காரைக்குடியில் இருந்து மானாமதுரை - மதுரை - அருப்புக்கோட்டைக்கும் ரயில் பாதைகள் அமைந்து, மும்முனை ரயில் சந்திப்பாக விளங்கி வருகிறது. காரைக்குடி வழியாக மதுரை சென்றால் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மிக எளிதாகச் செல்லலாம். திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர், மதுரைக்கு புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்காக 25 ஆண்டு காலமாக ரயில் பயணிகள், வர்த்தகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த ரயில் பாதைக்கான திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை. எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் மதுரை, திருப்பத்தூர், மேலூர், மதுரை புதிய ரயில் பாதை அமைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இதனால், காரைக்குடியில் இருந்து மதுரைக்கு விரைவாக ஒன்றரை மணி நேரத்தில் ரயிலில் சென்று விட முடியும். மேலும், மயிலாடுதுறையிலிருந்து பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டுகிறோம். இதன் மூலமாக மும்மதங்களின் ஆன்மீக தலங்களும், சுற்றுலா தலங்களும் ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டு, அதிக அளவில் சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள், நோயாளிகள், நீதி மன்றம் செல்வோர் பயணம் செய்வார்கள். இதனால் ரயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும். சுற்றுலா மேம்பாடு அடைவதன் மூலம், இப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. எனவே, தெற்கு ரயில்வே சார்பில், மயிலாடுதுறையில் இருந்து திருநள்ளாறு, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். மேலும், காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதையை அமைக்க வேண்டுகிறோம்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%