மதுரை மாநாட்டுக்கு எத்தனை மறைமுகத் தடைகள்...” - தவெக தலைவர் விஜய் விவரிப்பு
Aug 25 2025
11

சென்னை:
“எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக நம் மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும். மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு” என்று தவெக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற தவெக முதல் மாநில மாநாடு என்னை நெகிழ வைத்தது. ஆனால், மதுரையில் நிறைவுற்றிருக்கும் 2-வது மாநில மாநாடு என்னைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்த அளவு பேரன்பு காட்டும் உங்களை என் உறவுகளாகப் பெற என்ன தவம் செய்தேனோ? கடவுளுக்கும் மக்களுக்கும் என் மனத்தின் ஆழத்திலிருந்து கோடானு கோடி நன்றி.
மதுரையில் நடந்த 2-வது மாநில மாநாட்டின் வெற்றி என்பது உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. மதுரையில் கடல் வந்து புகுந்தது போல இருந்தது, நம் மாநாட்டுக் காட்சி. கபட நாடகம் மற்றும் பிளவுவாத சக்திகளை அரசியல் மற்றும் கொள்கை அளவில் நின்று உறுதியாக நாம் எதிர்த்ததை கடல்கள் சேர்ந்து கை தட்டியதைப் போல மக்கள் மனப்பூர்வமாக வரவேற்றது, மனதில் கல்வெட்டாக பதிந்தது.
இதை நம் அரசியல் மற்றும் கொள்கை வழிப் பயணத்தை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் அடர்த்தியாகவும் ஆக்கியுள்ளது. அதை இனி நாம் சற்றும் சமரசமின்றிச் செய்வோம். அதனை உறுதிப்படுத்த ‘செயல்மொழிதான் நம் அரசியலுக்கான தாய்மொழி’ என்பதை நினைவுபடுத்துகிறேன்.
எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக நம் மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும் என்பதை உணர்ந்து, மாநாடு பணிகளை சிறப்புடன் மேற்கொண்ட நிர்வாகிகள் உள்பட அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம். அல்லவை அனைத்தையும் புறந்தள்ளிப் புன்னகைப்போம். மக்களோடு மக்களாக இணைந்து நிற்கும் மக்களரசியல் மட்டுமே நமது நிரந்தர அரசியல் நிலைபாடு. மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு.
மக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து தொடர்ந்து பயணிப்போம். தூய அரசியல் அதிகார இலக்கை வெல்வோம். 1967, 1977 தேர்தல் அரசியல் வெற்றி விளைவுகளை, வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் நம் தமிழ் மக்கள் நமக்காக நிகழ்த்திக் காட்டப் போவது நிச்சயம்” என்று விஜய் கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?