நீலகிரியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான நீர்நிலைகள்: கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவுரை

நீலகிரியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான நீர்நிலைகள்: கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவுரை

நீலகிரி, ஆக. 23–


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில், கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது. அதிகாரிகள், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை கலெக்டர் வலியுறுத்தினார்.


விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லும் பாதைகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் ஆய்வு செய்து உறுதி செய்யப்படும். காவல்துறை மூலம் போக்குவரத்து சீரமைப்பு மேற்கொள்ளப்படும். சிலைகள் எடுத்துச் செல்லும் வழித்தடம் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், தர்மாக்கோல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்படுகின்றன. களிமண் சிலைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளின் அலங்காரத்திற்கு இயற்கை பொருட்களையே பயன்படுத்த வேண்டும். ரசாயன சாயங்கள், எனாமல், எண்ணெய் வண்ணங்கள் பயன்படுத்தக் கூடாது; சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.


சிலைகள், குன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சி, உதகை காமராஜ் சாகர் அணை, கூடலூர் இரும்பு பாலம் ஆறு, பந்தலூர் பொன்னானி ஆறு, கோத்தகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டுமே, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி கரைக்க அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.


கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) க்ரிதிகாம்னா, கஞ்சன் சௌத்ரி, குன்னூர் சார்பு ஆட்சியர் சங்கீதா, வருவாய் கோட்டாட்சியர்கள் சதீஷ் (உதகை), குணசேகரன் (கூடலூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%