மழைக்கால எச்சரிக்கை... நோய்த் தொற்றுகளை தடுக்க இவையெல்லாம் அவசியம் மக்களே!
மழைக்காலம் தொடங்கியாச்சி. மழைக்காலத்தில் உடலையும், நம் இருப்பிடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள முடியும். இந்த மழைக்காலம் தான் அதிகளவு நோய்கள் பரவ காரணமாக இருக்கிறது. அதாவது மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் நீர் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சி மற்றும் பரவலுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால், டெங்கு காய்ச்சல், மலேரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் எளிதில் பரவும் அபாயங்களுக்கு வழிவகுக்கும். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழி ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், சுத்தமான, வடிகட்டிய தண்ணீரைக் குடிப்பதும் ஆகும்.
* மழைநீரில் தேவையில்லாமல் நனைவதை தவிர்க்கவும். வெளியே செல்லும் போது ‘மழை கோட்’ அல்லது குடையை உடன் வைத்திருக்கவும்.
* கால்கள் ஈரப்பதமாக இருந்தால் பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனை தடுக்க கால்களை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருக்கவும்.
* பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை தடுக்க சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் அழுக்கு நீரில் நடப்பதை தவிர்க்கவும். எப்போதும் கைகளையும், கால்களையும் கிருமி நாசினி சோப்பை கொண்டு கழுவி சுத்தம் செய்யுங்கள். அல்லது வெளி இடத்தில் இருந்து வீட்டிற்கு சென்றதும் குளியல் போடுங்கள் அல்லது கால்கள், கைகளை நன்றாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும்.
* எந்தவொரு உணவையோ அல்லது தண்ணீரையோ பயன்படுத்துவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவவும்.
* மழைக்காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். கொசு தான் நோய்கள் பரவ முக்கிய காரணம். அதனால் வீட்டின் ஜன்னல்களை கொசு வலைகளால் மூடவும். அது முடியாவிட்டால், படுக்கை அறைவில் கொசு வலையை பயன்படுத்தவும்.
* எப்போதும் தலைமுடி ஈரப்பதமின்றி உலர்வாக இருப்பதை உறுதி செய்யவும். தலைமுடி ஈரப்பதமாக இருந்தால் பொடுகு தொல்லையும், சளி, காய்ச்சல் போன்ற உடல் நலப்பிரச்சனைகளும் ஏற்படலாம்.
* மழைக்காலத்தில், உங்களுக்கு அதிக தாகம் ஏற்படாமல் இருக்கலாம். இருப்பினும், உங்களை நீரேற்றமாக வைத்திருக்க நீங்கள் நிறைய கொதிக்க வைத்த அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
* மழைக்காலத்தில் தொற்று மற்றும் அஜீரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, தெரு உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், குப்பை உணவுகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வீட்டிலேயே சமைத்த புதிதாக சமைத்த ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
* மழைக்காலத்தில் சாலைகளில் நடக்கும் போது பொருத்தமான காலணிகளை பயன்படுத்தவும்(முழு பாதத்தையும் மூடக்கூடிய அல்லது நீர் புகாத காலணிகளை பயன்படுத்தலாம்)
* ஈக்களால் மாசு ஏற்படுவதை தவிர்க்க உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களை மூடி வைக்கவும்.
* மழையில் ஆடை நனைந்தால் வீட்டுக்கு வந்ததும் உலர்ந்த ஆடைக்கு மாறவும். ஈரமான ஆடைகளுடன் உட்கார வேண்டாம்.
* குப்பைக் குவியல்களும், தேங்கி நிற்கும் தண்ணீரும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகும். எனவே, நீங்கள் வசிக்கும் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருங்கள். கொசுக்கள் பெருகுவதை தடுக்க வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ தண்ணீர் தேங்குவதை தவிர்க்கவும்.
* கொசு கடியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேப்ப எண்ணெய் போன்ற இயற்கை கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்.
* மழைக்காலத்தில் குடிநீர் மாசடைவதற்கான வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது. மேலும் டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நீரால் பரவும் நோய்களை ஏற்படுத்தும். இந்த நோய்கள் உங்களை தாக்காமல் பாதுகாத்துக்கொள்ள, சுத்தமான, வடிகட்டப்பட்ட நீரை மட்டுமே குடிக்கவும்.
* மழைக்காலத்தின் போது பொதுவாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் சாதாரண சளி மற்றும் காய்ச்சல் முதல் கடுமையான மலேரியா அல்லது இரைப்பை குடல் அழற்சி வரை ஏற்படும் அபாயம் உள்ளதால் நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக பராமரிப்பதன் மூலமும், ஆரோக்கியமாக உணவு உட்கொள்வதன் மூலமும் நோய்த்தொற்று வராமல் தடுக்கலாம்.