மாணவர் சேர்க்கை குறைவு: 80 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறுத்தம்
Jul 30 2025
10

நடப்பு கல்வியாண்டில் 80 கல்லூரிகள் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்காமல், மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.
தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 31 அரசு உதவிப் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 401 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் 32 ஆயிரத்துக்கும் அதிகமான டிப்ளமோ படிப்பு இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1.10 லட்சம் இடங்களும் உள்ளன. கடந்த கல்வியாண்டில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரையில் 91 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் உயர்கல்வித்துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தது.
அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கையை பொறுத்தவரையில் நேரடி சேர்க்கையாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் எதிர்பார்த்தபடி விறுவிறுப்பாக நடைபெறவில்லை. இதற்கு, மாணவர்கள் மத்தியில் நிலவும் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் படிப்பின் மீதான மோகமே காரணம் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 80 சதவீத இடங்களும், அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் 70 சதவீத இடங்களும் நிரம்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கை காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பு கல்வியாண்டு 80 கல்லூரிகள் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்காமல், மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, 5-ல் 1 பங்கு கல்லூரிகள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஆர்வம் காட்டவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற 321 தனியார் கல்லூரிகளில், மொத்தமாக 36 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?