மாநகராட்சி நிர்வாக சீர்கேடு, சுகாதார சீர்கேடுகளை கண்டித்து ஆவடியில் 22–ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக.12–
ஆவடி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும் கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க.-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் 22–ந் தேதி -- வெள்ளிக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– கடந்த 51 மாத கால தி.மு.க. ஆட்சியில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்கூட அக்கறை காட்டுவதில்லை. மாறாக பொய்யான தகவல்களை, விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மக்களிடையே பரப்புவதிலேயே குறியாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவை களுக்கெல்லாம் விரைவில் விடிவுகாலம் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை; பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படவில்லை; கொசு மருந்து முழுமையாக அடிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் அவதியுற்று வருகின்றனர்.
மக்களின் வாழ்வாதார வசதிகளை செய்து தராத நிலையில் வீட்டு வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இங்குள்ள கடைகளுக்கு குப்பை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும், கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க.-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அண்ணா தி.மு.க. திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், 22–ந் தேதி -- வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில், ஆவடி மாநகராட்சி எம்.ஜி.ஆர். திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். அப்துல் ரஹீம், கழக அமைப்புச் செயலாளர் திருவேற்காடு பா. சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வி. அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி, நகரக் கழகச் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.