சென்னை, ஆக.12-
தமிழ்நாட்டில் முதல் முறையாக 55 ஏ.சி. மின்சார பஸ் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 30-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், 2-ம் கட்டமாக பெரும்பாக்கத்தில் ரூ.49 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மின்சார பஸ் பணிமனையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ.233 கோடி மதிப்பிலான 55 புதிய தாழ்தள மின்சார ஏ.சி. பஸ் மற்றும் 80 புதிய தாழ்தள மின்சார பஸ்கள் என மொத்தம் 135 பஸ்களின் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், தாழ்தள மின்சார ஏ.சி. பஸ் சேவை தமிழ்நாட்டில் முதல் முறையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பயன்பாட்டுக்கு வந்துள்ள மின்சார பஸ்களில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தரையில் இருந்து 40 செ.மீ உயரம் கொண்ட தாழ்தள மின்சார பஸ்சின் உயரத்தை, தேவையான நேரத்தில் டிரைவர் 25 செ.மீ உயரம் வரை குறைத்து மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பஸ்சில் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
புதிய பஸ்களின் சிறப்புகள்
புதிய தாழ்தள மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் புதிய தாழ்தள பேருந்துகளில் உள்ள சிறப்பு அம்சங்கள்:
உலகின் முக்கியமான நகரமாக உருவாகி வரும் சென்னையில் பொதுமக்கள் அனைவரும் பொதுப்போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 55 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்துகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தரையில் இருந்து 40 செ.மீட்டர் (400 மி.மீ) உயரம் கொண்ட தாழ்தள மின்சார பேருந்தின் உயரத்தை, தேவையான நேரத்தில் பேருந்து ஓட்டுநர் 25 செ.மீட்டர் (250 மி.மீ) உயரம் வரை குறைத்து மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பேருந்துகளில் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் எளிதாக அமரும் வகையில் இருக்கைகள் ஒரே சமதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்தள மின்சாரப் பேருந்துகளில் இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி 65 செ.மீட்டருக்கு (650 மி.மீ.) பதிலாக 70 செ.மீட்டர் (700 மி.மீ) அகலம் உள்ளதால், நின்று செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.