மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கிருஷ்ணரே போற்றிய மாதம் இது. மார்கழி மாதத்தின் சிறப்புகளை காண்போம்.
சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும்
நாட்களை வைத்து தான் மாதங்கள் கணக்கிடப்படுகிறது. தனுர் ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் காலமே மார்கழி மாதம் ஆகும். பகவான் கிருஷ்ணர் எதற்காக மாதங்களில் நான் மார்கழி என்கிறார்! எந்த ஒரு வேலையுமே உஷத் காலத்தில் அதாவது பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகின்ற விடியற்காலை நாலு மணி முதல் 6 மணி வரை செய்தோம் என்றால் மற்ற நேரங்களில் செய்யப்படும் செயல்களை விட ஆயிரம் மடங்கு உயர்ந்ததாக அமையும்.
நமது ஒரு வருடம் என்பது தேவர்களுக்கோ ஒரு நாள். அவர்களின் ஒரு நாளில் பிரம்ம முகூர்த்தமாக அமைவது இந்த மார்கழி மாதம் நாம் மட்டுமல்ல அந்த தேவாதி தேவர்களும் இந்த பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பகவானை துதிக்க பூலோகம் வருகிறார்கள். தேவாதி தேவர்களும் பக்தர்களும் கூடி அவரை துயில் எழுப்பி வேண்டுகின்ற பக்தி மிகுந்த மாதம் ஆதலால் பகவான் கண்ணனுக்கு மாதங்களில் பிடித்த மாதமாக இது திகழ்கிறது. இதை விட வேறு நமக்கு என்ன வேண்டும்!
இந்த மார்கழி மாதம் முழுவதுமே சிறப்பு வாய்ந்த மாதம் இந்த மாதத்தில் ஒரு துளியைக் கூட நாம் சாதாரண லவ்கீக விஷயங்களுக்காக செலவழிக்க கூடாது. இது பீடை மாசம் அல்ல. பீடுமிகு மாசம்.
இதை தனுர் மாதம் என்றும் சொல்வார்கள். தனுர் என்றால் வில் அம்பு. போராட்டங்கள் இருந்தாலும் விடாது. இந்த மாதத்தில் விரதம் இருந்து இறைவனை துதித்தால் அத்தனை நன்மைகளையும் அள்ளித் தருவார்.
அதுவும் பாரதத்தின் மற்ற பகுதிகளை விட தமிழகத்தில் இதன் மகத்துவம் உணர்ந்து இந்த மாதம் மிகவும் போற்றப்படுகிறது. ஆன்மீகமாகவும் அறிவியல் படியும் இந்த மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மதம்.
விடியற்காலை எழுந்து வாசலில் சாணமிட்டு கோலமிட்டு விளக்கேற்றி குளித்து கோவிலுக்கு சென்று தெய்வங்களை சுப்ரபாதம் வேதங்கள் முழங்க அவரது உஷகாலத்தில் எழுப்பி துதிக்கும் போது ஆயிரம் காலம் துதித்த பலன் நமக்கு கிடைக்கிறது. நமது அறிவு தீட்சன்யம் பெறுகிறது. நினைவாற்றல் பெருகுகிறது. நமது சகல தோஷம் நீங்குகிறது. கிரக கோளாறுகள் விலகுகின்றன. முன் ஜென்ம வினை தீர்கிறது. மோட்சம் பெற வழி பிறக்கிறது.
வருடத்தின் பிற 11 மாதங்களில் நாம் செய்யும் செயல்களில் வெற்றி பெற சகல சௌபாக்கியங்களும் கிட்ட இந்த ஒரு மாதம் முழுவதும் நாம் பகவான் நாமாவை ஜெபிக்க வேண்டும். நம் வளர்ச்சிக்கான திட்டங்களை சிந்தித்து தீட்ட வேண்டும்.
எங்கெங்கோ இருக்கும் கோயில்களை நாடி கூட செல்ல வேண்டும் என்பதில்லை. நம் வீட்டின் அருகில் இருக்கும் பிள்ளையார் கோவில் அல்லது அரசமரம் வேப்பமரம் கீழே அமர்ந்துள்ள விநாயகர் என எந்த தெய்வத்திற்காவது அபிஷேகம் செய்து நம் கையால் பறித்த பூக்களை தொடுத்து மாலை அணிவித்து பக்தி பூர்வமாக சுற்றிவர பலன்கள் கை மேல் கிடைக்கும்.
இது ஓசோன் நிறைந்த மாதம். கோவிலின் கோபுர கலசங்கள் அந்த ஓசோனை உறிஞ்சி கர்ப்பகிரகத்தில் பரப்பி கோவிலுக்கு வருவோருக்கு வழங்குகிறது.
பேசுவதை விட பாடும் பொழுது நமக்கு மூச்சுப் பயிற்சி அதிகமாகிறது. அந்த நேரத்தில் கோவிலில் சென்று பாடும் பொழுது கோவிலில் கிடைக்கும் ஓசோனால் நமது சுவாசம் புத்துணர்ச்சி பெற்று ரத்த ஓட்டம் சீராகி பல பலன்களை தருகிறது.
அதனாலேயே மார்கழி மாதங்களில் சங்கீதத்திற்கு நமது தென்னகத்தில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
விநாயகரில் ஆரம்பித்து உள்ளோம். இந்த மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியில் விரதம் இருந்து அவரைப் பூஜிப்பது மிகவும் உயர்ந்தது.
வாருங்கள் ஒவ்வொன்றாக இந்த மாதத்தில் சிறப்புகளை காண்போம்.
1.பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆன ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை இயற்றி இந்த மாதம் பாவை நோன்பு நூற்பதின் மூலம் நினைத்ததை சாதிக்க முடியும் என வழிகாட்டினார்.
2.நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஆகிய பக்தி நூல்களை இயற்றி அதனை இந்த மாதத்தில் வாசித்து பாவை நோன்பு இருப்பதால் இறைவனிடம் கேட்டதைப் பெற முடியும் என வழி காட்டினார்.
ஆதலால் இந்த மாதம் முழுவதுமே வைணவ தளங்களில் திருப்பாவையும் சிவதலங்களில் திருவெம்பாவையும் திருப்பள்ளி எழுச்சியும் பாடியே பிரம்ம முகூர்த்தத்தில் பகவானை சயனத்தில் இருந்து எழுப்புதல் முதலான 16 வகை வழிபாடுகள் செய்யப் படுகிறது.
3.வைகுண்ட ஏகாதசி. உற்பத்தி ஏகாதசி
இந்த வளர்பிறை ஏகாதசியில் தான் பெருமாள் வைகுண்டத்தின் கதவுகளை அவராகவே திறந்து வைத்துக் கொண்டு நமக்கு அருள் ஆசி புரிகிறார். ஆதலால் இது வைகுண்ட ஏகாதசி ஆனது. அன்று இருக்கும் விரத பலனாக நமது ஏழு ஜென்ம பாவங்கள் நீக்கி சகல சௌபாக்கியங்களையும் பெற்று முடிவில் மோட்சத்தை அடையலாம்.
பகவான் பகவத் கீதை அருளியது இந்த நாளில் தான். ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து ராப் பத்து உற்சவங்களுடன் வைகுண்ட ஏகாதேசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது எல்லா வைணவ கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சூழ பெருமாள் வீதி உலா வருவார். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி இந்த ஏகாதசி உபவாசம் இருந்தால் மொத்த ஏகாதசிகளுக்கும் உபவாசம் இருந்த பலன் கிட்டும்.
உற்பத்தி ஏகாதசி என்பது இம் மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதேசி ஆகும். ஏகாதசி உருவானதே இந்த நாளில்தான். அதனால் இதை உற்பத்தி என்கிறோம்.
இந்த நாளில் நாம் விரதம் இருந்தால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும்
4.திருவாதிரை.
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் மார்கழி பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை. அவருக்கு ஆசுதோஷி என்ற பெயர் உண்டு. அதாவது வேண்டியதை வேண்டியவாரே வழங்குபவர் எனப் பொருள். தில்லையில் சேத்தனார் என்ற சிவனடியார் வீட்டில் களியும் கூட்டும் உண்டு அவர் பெருமையை இந்த நாளில் தான் உலகுக்கு உணர்த்தினார். எல்லா சிவ ஸ்தலங்களிலும் இந்த திருவாதிரை திருநாள் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம், உத்தரகோசமங்கை ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவாரூர் தியாகராஜரின் பாத தரிசனம் இந்த ஒரு நாளில் மட்டுமே நாம் சேவிக்க முடியும். வேண்டியதை வேண்டிய வாரே பெற இன்னாளில் களியும் கூட்டும் செய்து சிவனை தொழுவோம் அருள் பெறுவோம்.
5.ஹனுமத் ஜெயந்தி ஆஞ்சநேயர் பெருமாள் மார்கழி மாதத்தில் அமாவாசை கூடிய மூலா நட்சத்திரத்தில் தான் அவதாரம் செய்தார் எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி பெற அருளும் இவரை இந்நாளில் விதவிதமான நிவேதியங்கள் செய்து வேண்டி அருள் பெறுவோம்
6.மிருகசீரிஷம்
இம்மாதத்திற்கு மிருகசீருஷ மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாத மிருகசீரிஷ நட்சத்திரம் மிகவும் உயர்ந்தது சிரஞ்சீவி மார்க்கண்டேய ரிஷி அவர்கள் அவதரித்தது இந்த நன்னாளில்தான். இந்நாளில் மிருத்தியுஞ்ஜய ஜபம் செய்து தீர்க்க ஆயுளை பெறுவோம்.
7.தேய்பிறை சப்தமி அஷ்டமி நவமி
இந்த மூன்று நாட்களை அஷ்டகா அனுவஷ்டகா என்று கூறுவார்கள் இந்த மூன்று திதிகளிலும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது அவர்களது ஆசியை பெற்றுத் தரும். இது குறித்த விபரங்களை உங்கள் குடும்ப ஸாஸ்த்திரிகளிடம் கேட்டு அனுஷ்டிக்கவும்.
8.கூடாரவல்லி.
மார்கழி மாதம் 27 வது நாள் ஆண்டாள் நாச்சியார் அவர்கள் பாவை நோன்பிருந்து கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா என்ற 27ஆவது திருப்பாவை பாடலை பாடி முழங்கை நெய் வழிய சர்க்கரை பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்தார் இந்த மாதத்தில் அன்னதானம் செய்வது தானங்கள் செய்வது மிகவும் உகந்ததாகும். அதனாலேயே மார்கழியில் அரிசி மாவால் புழு பூச்சிகளுக்கும் உணவு கிடைக்கும் வண்ணம் வாசலில் கோலம் இடுகிறோம் பெருமாளுக்கு பிடித்தமான வெண்பொங்கல் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து கோவில்களிலும் வீடுகளிலும் அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறோம். இந்த கூடாரவல்லி அன்று பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து அனைவருக்கும் வழங்கி பெருமாள் அருளை பெறுவோம்.
9. படி உற்சவம் மலை மேல் குடி கொண்ட முருகருக்கு ஒவ்வொரு படியிலும் திருப்புகழ் பாடி படி உற்சவம் இம்மாதத்தில் கொண்டாடப் படுகிறது மலைபோலே வரும் துயர் நீங்க திருப்புகழ் பாடி முருகன் அருள் பெறுவோம்.
10. ரமண ஜெயந்தி மார்கழி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் தான் ரமண மகரிஷி அவர்கள் பிறந்தார்கள். அந்த தினம் ரமண மகரிஷி ஜெயந்தியாக திருவண்ணாமலையிலும் அவரது ஆசிரமத்தில் கொண்டாடப்படுகிறது.
11. மகா பெரியவா ஆராதனை.
மகா பெரியவா ஸ்ரீ சந்திர சேகர ஸ்வாமிகள் அவர்கள் இந்த மார்கழி மாதம் கிருஷ்ணபக்ஷ துவாதசியில் தான் சித்தி அடைந்தார். அதனால் அந்த திதியில் அவரது ஆராதனை நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாளில் அனைவரும் மகா பெரியவாளை துதித்து அவரது ஆசிகளைப் பெறுவோம்.
12. போகி
பண்டிகை.
இந்த மார்கழி மாதம் முழுவதும் பகவானையே நினைத்து துதித்து 29 ஆவது நாளில் பகவானுடைய முழு அருளையும் பெற்று துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு அதனை போகிப் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கிறோம்.
13. அறிவியல்
நன்மைகள் நம் முன்னோர்கள் பக்தியை நம் மனதில் புகுத்தும் போதே நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் நம் உடலுக்கும் நன்மை ஏற்படுமாறு வழிவகைகள் செய்தனர். அறிவியல் நன்மைகளை பார்ப்போம் இந்த மாதத்தில் தான் ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதனால் நமக்கு விடியற்காலைப் பொழுதில் நல்ல ஆக்சிஜன் கிடைக்கும். பெண்கள் வீட்டு வாசலில் குனிந்து நிமிர்ந்து கோலங்களிடுவதால் அது அவர்களுக்கு ஒரு யோகாவாகவும் அவர்களது மூளைக்கு நல்ல ஆக்சிஜன் செல்வதால் சிந்தித்து செயல்பட உறுதுணையாக இருக்கிறது. ஆண்கள் ஊர்வலமாக நடைபயணம் செல்வதால் அவர்களுக்கும் அந்த நன்மைகள் கிடைக்கின்றன அவ்வாறே அந்த நேரத்தில் நாம் ஒலிக்கும் இந்த மந்திரங்கள் நமது மூளையின் நரம்புகளை தூண்டிவிட்டு நமது கிரகிக்கும் சக்தி ஞாபக சக்தி அனைத்தையும் மேம்படுத்துகிறது விடியற் காலையில் மாணவர்கள் படித்தால் நினைவாற்றல் பெருகுகிறது.
இரண்டு விதத்திலும் மார்கழியின் மகிமை அறிந்தோம் அதனால் நம் முன்னோர் வகுத்த பாதையில் சென்று நன்மை பெறுவோம்

வனஜா நாகராஜன்
யு.எஸ்.ஏ